சென்னை,நவ.6- அர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான ‘ஜான் டோ’ வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் அறிமுக நிகழ்வில் நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது: “ஒரு நல்ல கணவராக, மனைவியாக, குழந்தையாக, நடிகராக அல்லது தொழில்நுட்பக் கலைஞராக இருக்கிறோமா என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதற்கான பதில், நம்மிடம் குறைகள் இருந்தாலும் நாம் நம்முடைய இடத்தில் சிறந்தவர்கள்தான் என்பதுதான். ஒரு இயக்குநருக்கான உண்மையான அங்கீகாரம் பார்வையாளர்களிடமிருந்துதான் கிடைக்கும். நெட்ஃபிளிக்ஸ், ஜீ தமிழ், திவோ மற்றும் ஏஜிஎஸ் போன்ற நிறுவனங்கள் படத்தைப் பார்த்துவிட்டு எங்களுடன் இணைந்திருப்பது மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘ஜான் டோ’ திரைப்படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்” நன்றி என்றார்.*******
*இயக்குநர் மதுமிதா பேசியதாவது: ‘மனித உணர்வுகள்தான் என்னுடைய படங்களின் முக்கிய அம்சமாக இருக்கும். ‘ஜான் டோ’ ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர். கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பிரதேசத்தில் கதை நடைபெறுகிறது. அர்ஜுன் தாஸ் கேரள காவல்துறை அதிகாரியாகவும், சஞ்சனா தமிழ்நாடு காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் எனக்கு ஒரு அக்கா கிடைத்திருக்கிறார் என்றால் அது அர்ச்சனா மேடம்தான். அவர் எனக்குப் படப்பிடிப்புத் தளத்தில் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்”. என்றார்.
அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

