“எங்கள் தங்கம்” திரைப்பட விமர்சனம்

ராஜ் நிடிமொரு தயாரிப்பில் பி.வி.நந்தினி ரெட்டி இயக்கத்தில்  சமந்தா, திகந்த் மஞ்சாலே, கௌதமி, ஆனந்த், குல்ஷன் தேவய்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “எங்கள் தங்கம்”. கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட திகந்த், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் சமரசம் செய்து கொள்ளவும், தங்கையின் திருமணத்தில் கலந்து கொள்ளவும் மனைவியை அழைத்து வருகிறார். ஆனால், மிகவும் கட்டுப்பாடான அந்த குடும்ப சூழலுக்கு தன்னை மாற்றிக்கொள்ள சிரமப்படும் சமந்தா, கணவருக்காக அந்த குடும்பத்துடன் ஒன்றிணைந்து வாழ முயற்சிக்கிறார். இதற்கிடையே, சமந்தாவை பார்த்த ஒருவர் அவரை ‘ஜான்சி’ என்று அடையாளம் காண்கிறார். இதன் மூலம் அவரது கடந்த கால வாழ்க்கை குறித்து பல மர்மங்கள் வெளிவர தொடங்குகின்றன. சிறையில் இருக்கும் கர்ணா, சமந்தாவை தேடிவருகிறார். இறுதியில் கர்ணா என்பவருக்கும், சமந்தாவுக்கும் என்ன தொடர்பு? ஏன் அவர் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து வாழ்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகியாக நடித்திருக்கும் சமந்தா இந்த படத்தின் மிகப்பெரிய பலம். அமைதியான குடும்ப பெண்ணாகவும், அதே நேரத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டும் பெண்ணாகவும் இரண்டு பரிமாணங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது உழைப்பு தெளிவாக தெரிகிறது. படத்தின் முதல் பாதி மெதுவாக தொடங்கினாலும், சமந்தாவின் பின்னணி குறித்த மர்மங்கள் வெளிவர தொடங்கியதும் விறுவிறுப்பு அதிகரிக்கிறது. குறிப்பாக இடைவேளைக்கு முந்தைய காட்சிகள் சுவாரஸ்யத்தை கூட்டுகின்றன.

இடைவேளைக்கு பிறகு சமந்தா- கர்ணா மோதலை மையமாக வைத்து கதை நகர்கிறது. சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும், அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை எளிதாக யூகிக்க முடிவது திரைக்கதையின் பலவீனமாக மாறுகிறது. கர்ணா கதாபாத்திரமும் வழக்கமான வில்லன் பாணியிலேயே பயணிக்கிறது. குடும்ப உறவுகள், கடந்த கால ரகசியங்கள் மற்றும் ஒரு பெண்ணின் போராட்டத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் நந்தினி ரெட்டி. இயக்குநர் நல்ல கதைக்களத்தை தேர்வு செய்திருந்தாலும், இரண்டாம் பாதி திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இருந்தாலும் சமந்தாவின் நடிப்பும், ஆக்‌ஷன் காட்சிகளும் படத்தை தாங்கி நிற்கின்றன.