“ராம் அண்ட் லீலா” திரைப்பட விமர்சனம்

ஆர். ரவீந்திரன், சுதர்சன் ஆகியோரின் தயாரிப்பில் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்க்தில்  ரியோ, வர்த்திகா, சேத்தன், முனீஷ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், மாபாஃபா ஆனந்த், பாலாஜி தியாகராஜன் தயாளன், தாஃபியா அபு, கவின் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ராம் அண்ட் லீலா” திரைப்படம். ரியோவும் வர்த்திகாவும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். இந்நிலையில் மாலை 6 மணிக்கு மேல் என்னை சந்திக்க கூடாது என்ற நிபந்தனை விதிக்கிறாள் வர்த்திகா. மாலை 6 மணி ஆனதும் வர்த்திகா ஆணாக மாறிவிடுகிறாள். ஆணாக மாறிய வர்த்திகாவை ரியோவின் தம்பி காதலிக்கிறார். அதாவது பகலில் பெண்ணாக இருக்கும் வர்த்திகாவை ரியோ காதலிக்கிறார். இரவில் ஆணாக மாறிய வர்த்திகாவை ரியோவின் தம்பி காதலிக்கிறார். பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் மாறும் வர்த்திகா யார்?. பெண்ணாக இருக்கும்போது ரியோவை திருமணம் செய்தாரா? அல்லது ஆணாக மாறும்போது ரியோவின் தம்பியை திருமணம் செய்தாரா? என்பதுதான் இப்படத்தின் கதை.

இயக்குநரின் மூளையில் உதித்த இந்த வித்தியாசமான கற்பனையை திரைப்படமாக்க திரையில் பல குழப்பங்களுக்கு திக்குமுக்காடி தனது கற்பனை ஊற்றை ஓடவிட்டிருக்கிறார் இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன். தனது அப்பாவியான முகபாவனைகள் மூலமும், இயல்பான  நகைச்சுவையிலும் கதாபாத்திரத்திற்கு முழுமையாக உயிர் கொடுத்துள்ளார் கதாநாயகன் ரியோ. அமைதியும் நிதானமும் நிறைந்த நடிப்பால் காதல் மற்றும் பதற்றமான காட்சிகளில் உணர்ச்சிகளைத் துல்லியமாக வெளிப்படுத்தி, பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு, எழில்மிகு அழகோடு அசத்தியுள்ளார் கதாநாயகி வர்த்திகா. அவரின் பேசும் விழிகள் மூலம் தீவிரமான உணர்வுகளைக் கடத்தி, கனமான முதன்மையான கதாபாத்திரத்தை ஏற்று தனது முழு ஈடுபாடுடைய பங்களிப்பை வழங்கியுள்ளார். சேத்தன், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட் ஆகியோர் தங்களது அனுபவமிக்க நடிப்பால் திரைக்கதை நகர்வுக்கு வலு சேர்த்து, கதையின் தீவிரமான உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். முனீஷ்காந்த், மாபாஃபா ஆனந்த் இருவரும் தங்களது இயல்பான நகைச்சுவையால் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கி அதகளப்படுத்தியுள்ளனர். மொத்தத்தில் “ராம் அண்ட் லீலா” திரைப்படம் ஆரம்பமும் முடிவும் தெரியாமல் தூக்கணாங்குருவி கட்டிய அழகான கூடு.