கடந்த 26.10.2026 அன்று இரவு தேனி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். இவர்கள் கொலை, வழிப்பறி, போதைப் பொருள் தொடர்பான குற்றங்கள், ஆயுதம் வைத்திருத்தல், திருட்டு, போன்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர். சிறையிலிருந்து தப்பியோடிய தகவல் கிடைத்ததும், தென் மண்டலம் மற்றும் மத்திய மண்டல களப்பணியில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். வாகனத் தணிக்கை, தங்கும் விடுதிகளில் சோதனை, சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல் மற்றும் அந்தந்த பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
காவல்துறை தலைமை இயக்குநர் படைத்தலைவர் முனைவர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறைத் தலைவர் விஜேந்திர எஸ். பிதரி, இ.கா.ப., சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார். தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் சிறப்பு இலக்குப் படை ஆகியவற்றைச் சேர்ந்த காவலர்களும் இந்நடவடிக்கையில. ஈடுபடுத்தப்பட்டனர். தொழில்நுட்பத் தகவல்களைச் சேகரிக்கும் வகையில், கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலமாகவும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தீவிரமாகத் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. மேலும், காவல்துறை தலைமை இயக்குநர் படைத் தலைவர் கேரள மாநில காவல்துறை தலைமை இயக்குநர் ஆர்.ஏ.சந்திரசேகருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்கள். தமிழ்நாடு காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையின் பயனாக, தப்பியோடிய 17 கைதிகளில்13 பேர் 24 மணி நேரத்திலும் மீதமுள்ள 4 பேர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பிடிக்கப்பட்டனர்.
இந்நடவடிக்கையில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை காவல்துறை தலைமை இயக்குநர் படைத்தலைவர் முனைவர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., பாராட்டினார்.
தங்க முகையதீன்

