‘பிளாக் கோல்டு’ – நவ.13ல் வெளியீடு

எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், தீரன் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பிளாக் கோல்டு’. இப்படத்தில் லிவிங்ஸ்டன், ப்ரியாலயா,துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  யாருக்கும் தெரியாத பெரிய நிழல் வணிகம், ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனை எவ்வாறு பாதிக்கிறது என்பதே இப்படத்தின் கதை. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டிருப்பது கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இப்படம் நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் தயாரிப்பாளர் எம். மூர்த்தி பேசியதாவது:  “நான் முதலில் நடிகராக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். இன்று தயாரிப்பாளராக உங்கள் முன்னால் நிற்கிறேன். இயக்குநர் தீரன் அருண்குமார் இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது, மிகவும் புதுமையான கதைக்களமாக இருந்தது. வேறு சில தயாரிப்பாளர்களிடமும் கதையைச் சொல்லியிருந்தாலும், அதிக காலம் எடுத்துக்கொண்டதால், இந்தப் படத்தைத் நானே தயாரிக்க சம்மதித்தேன். இந்தப் படம் உருவாக எனது முழு ஆதரவையும் கொடுத்தேன்”. என்றார்*****

 இதுபோன்ற புதுமையான கதையைப் படமாக்கும்போது ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்குமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால் எனது மனைவி, மகளிடம் கதையைப் பற்றிக் கூறியபோது, இது வித்தியாசமான முயற்சி என்றும், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பேசும் கதை என்றும் ஊக்கமளித்தார்கள். இந்தப் படத்தை உருவாக்குவதில் கதாநாயகன் வெற்றியின் பங்களிப்பு மிக முக்கியமானது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இரவு, பகல் பாராமல் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள்.

 நான் இதுவரை ஆயிரக்கணக்கான படங்களைபார்த்திருப்பேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன், ‘பிளாக் கோல்டு’ இந்திய சினிமாவில் ஒரு புதுமையான படமாக இருக்கும். படத்தின் மேக்கிங்கும் மிக சிறப்பாக வந்துள்ளது. ஒரு படத்தைச் சிறிய படம், பெரிய படம் என்று பார்ப்பதைவிட நல்ல படமா என்பதுதான் முக்கியம். இயக்குநர் ஏ. வெங்கடேஷ் உள்ளிட்ட அனைவரும் இந்தப் படத்தில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.