தங்க முகையதீன்
விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம், சரண் சக்தி, தென்றல் ரகுநாதன், பரணி, அசண்ட் ராஜு, முல்லையரசி, யாஸ்மின், சுகாதர் தாஸ், வினோத் ஆகியோர் நடித்திருக்கும் படம் “அங்கம்மாள்”. திருநெல்வேலி தாம்பிரபரணி ஆற்றங்கரையோரமுள்ள ஒரு கிராமத்தில் அகம்பாவத்தின் உச்சாணிக் கொம்பிலிருக்கும் அங்கம்மாளுக்கு (கீதா கைலாசம்) சுடலை ( பரணி), பவளம் (சரண் சக்தி) ஆகிய இரண்டு பிள்ளைகள். கணவனை இழந்த அங்கம்மாள் ஊருக்கு பால் ஊற்றியும் தனது காணி நிலத்தில் விவசாயம் செய்தும் பிழைத்து வருகிறார். பெரிய மகன் சுடலை விவசாயம் பார்க்கிறார். பவளம் மருத்துக்குப் படித்து டாக்டராக இருக்கிறார். தம்பியை படிக்க வைத்து டாக்டராக்கிய அம்மா தன்னை படிக்க வைக்கவில்லையே என்ற விரக்த்தியில் தனது மனைவி சாரதா (தென்றல் ரகுநாதன்) மகளோடு அம்மாவுடனே வாழ்ந்து வருகிறார் சுடலை. மாமியார் என்ற அகத்தையில் மருமகள் சாரதாவை அவ்வப்போது அடித்து அடக்கி வைத்திருக்கிறார் அங்கம்மாள். இவ்வாறிருக்க டாக்டர் பவளம் ஒரு பணக்கார குடும்பத்துப் பெண்ணான ஜாஸ்மினை (முல்லையரசி) காதலிக்கிறார். மாற்று மதமானாலும் மாப்பிள்ளை டாக்டர் என்பதால் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள் ஜாஸ்மினின் பெற்றோர்கள். மாப்பிள்ளையின் குடும்பத்தார்களைப் பார்க்க பெண் வீட்டார் கிராமத்துக்கு வரும்போது தனது அம்மா அங்கம்மாள் மேல் சட்டையில்லாமல் இல்லாமல் மாராப்போடு இருந்தால், பெண் வீட்டார்கள் பழைய பஞ்சாங்கத்து குடும்பம் என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காக தனது அண்ணி சாராதாவிடம் அம்மாவை ரவிக்கை போட சொல்லச் சொல்கிறார் பவளம். அதற்கு மறுக்கிறாள் மாமியார் அங்கம்மாள். பவளமே நேரடியாக அம்மாவிடம் வந்து பெண்வீட்டார்கள் வரும்போது ரவிக்கைச் சட்டை போட்டுக்கொள்ள அம்மாவிடம் கோபப்படாமல் கெஞ்சுகிறார். அப்போது சரியென்று சொன்ன அங்கம்மாள் பெண் வீட்டார்கள் வரும் நாள்பார்த்து வாங்கிவைத்திருந்த சட்டைத்துணியை தீயில் எரித்துவிடுகிறார் அங்கம்மாள். பெண் வீட்டார்கள் முன் அங்கம்மாள் மேல் சட்டை அணிந்திருந்தாளா? இல்லையா? சட்டை அணிய முதலில் சம்மதம் தெரிவித்த அங்கம்மாள் பிறகு ஏன் மறுத்தால்?. என்பதுதான் கதை. இது ஒரு பழங்காலத்து கிராமத்தின் எதார்த்தமான கதைக்களத்தில் நின்று விளையாடியிருக்கிறார் இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன். அகம்பாவம் பிடித்த மாமியார்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை தத்ரூமாக நடித்துக் காட்டியிருக்கிறார் கீதா கைலாசம். வாயில் சுருட்டும் கையுமாக புகைத்து ஊதும் காட்சி பழக்கமில்லாதவராக இருந்தாலும், பழக்கமுள்ளவர்கள்போல் புகையை வெளியே ஊதும் காட்சியை புகைப்பிரியர்கள் ரசிப்பார்கள். மாமியாருக்கு அடங்கிப்போவதில் தென்றலாகவும், பிறகு ஆத்திரத்தை கொட்டுவதில் ரகுநாதனாகவும் காட்சியளிக்கிறார் தென்றல் ரகுநாதன். அம்மாவிடம் கெஞ்சுவதிலும் ஆனந்தத்தில் முகம் மலர்வதிலும் திரையரங்கில் காதலி முல்லையரசியோடு கசமுசாவில் சல்லாபிப்பதிலும் முத்திரை பதிக்கிறார் சரண். அம்மாவோடு ஆத்திரமாக பேசும் மனைவியை கண்டிக்கும் காட்சியில் பரணி தாய் பாசத்துக்கு பறைசாற்றுகிறார். கிராமத்தின் அழகை படபிடித்து திரையில் காட்டிய ஒளிப்பதிவாளரின் திறமை திரையில் பளிச்சிடுகிறது. மொத்தத்தில் “அங்கம்மாள்” திரைப்படம் பல விருதுகளை அள்ளிச் செல்லும்.

