(தங்க முகையதீன்)
—————
ஆஞ்சநேயா புரெடெக்ஷன் மற்றும். ஶ்ரீநிதி புரடெக்ஷன் தயாரிப்பில் மணிபாரதி இயக்கத்தில் ஶ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, பிளாக் பாண்டி, வி.ஜெ.பப்பு, விக்ரம், திவ்யா, ஜான் விஜய், தேவிபிரியா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “தி பெட்”. சென்னையில் தகவல் தொழில்நுட்ப குழுமத்தில் ஶ்ரீகாந்தும் அவரது நண்பர்களான பிளாக் பாண்டி, பப்பு, விக்ரம் ஆகியோர் தங்களின் நான்கு நாட்கள் விடுமுறையை கழிக்க ஊட்டிக்கு செல்கிறார்கள். அங்கு உல்லாசமாக இருக்க பாலியல் தொழிலாளியான சிருஷ்டி டாங்கேவேயும் உடன் அழைத்துச் செல்கிறார்கள். சிருஷ்டி டாங்கேவை ஶ்ரீகாந்த் பார்த்ததும் காதல்வசப்படுகிறார். அதனால் சிருஷ்டி டாங்கேவை தன் நண்பர்கள் மூவரும் தொடாதவாறு பார்த்துக் கொள்கிறார். ஒருநாள் திடீரென்று சிருஷ்டி டாங்கே காணாமல் போய்விடுகிறார். அதற்கு மறுநாள் தன் நண்பர்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டிவைக்கப்பட்டு சாலையோரத்தில் பிணமாக கிடக்கிறார். சிருஷ்டி டாங்கே எப்படி காணாமல் போனார்? நண்பனை கொன்றது யார்? சிருஷ்டி டாங்கே பாலியல் தொழிலாளி என்று தெரிந்தும் ஶ்ரீகாந்த் அவரை காதலிக்க வேறொரு காராணம் இருக்கிறது. அது என்ன காரணம்? என்பதை தெளிவு படுத்துவதுதான் இப்படத்தின் கதைக்களம். ஶ்ரீகாந்த தனது வழக்கமான நடிப்பைத்தான் இப்படத்திலும் காட்டியிருக்கிறார். கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பை கொடுப்பதுதானே நடிப்பு. காதல் கைகூடுமா என்ற ஏக்கத்திலேயே படம் முழுக்க பயணிக்கிறார். சிருஷ்டி டாங்கே பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தாலும் ஆபாச காட்சிகள் எதுவும் இல்லாமல் இயக்குநர் படமாக்கியிருப்பது பாராட்டுதலுக்குறியது. இதனால் சிருஷ்டி டாங்கேவின் சுயமதிப்பு காப்பாற்றப்பட்டுள்ளது. கன்னக்குழி சிரிப்பழகோடு ரசிகர்களின் மனதில் ரீங்காரமிடுகிறார். பிளாக் பாண்டி, பப்பு, விக்ரம் ஆகியோர் தங்களுக்குறிய கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். ஆய்வாளராக வரும் ஜான் விஜய், தனது வழக்கமான அலட்டல் இல்லாமல் துப்பறிதல் காட்சிகளை விறுவிறுப்புடன் உச்சக்கட்ட காட்சிவரை பயணித்து பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். தாஜ்நூரின் இசைத்தூறலில் ரசிகர்களை நனைக்கிறார். கோகுலின் ஒளிப்பதிவில் ஊட்டியின் அழகை ரசிக்க முடிகிறது. இதுவரை காணாத இடங்களையெல்லாம் தேடிப்பிடித்து படம் பிடித்துள்ளார். இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல் படம் முடிவடைகிறது. இளசுகளுக்கு இப்படம் ஒரு உல்லாசக் கட்டில். நாவல் பிரியர்களுக்கு இப்படம் ஒரு சாய்ந்தாடும் நாற்காலி.

