‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை வெளியீடு

அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை  தயாரிப்பில், இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க,  கலக்கலான பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள படம்  ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’.  விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. இவ்விழாவில்  நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது.: “எனக்குக் கிடைத்த எல்லா இயக்குநர்களும் நல்ல இயக்குநர்கள் தான், அவர்களால் தான் நான் இந்த  அளவு வளர்ந்துள்ளேன். நானும் ஆர் கே செல்வமணி எல்லாம் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது என்னை யாருக்கும் பிடிக்காது, அப்போதே ரௌடித்தனம் பண்ண ஆரம்பித்தது தான் காரணம். ஆர் கே செல்வமணி, ஆர் வி உதயகுமாரிடம் பல மலரும் நினைவுகள் உள்ளது.  எனக்கு வாய்ப்பு தந்த இருவருக்கும் நன்றி. அண்ணாதுரை அவர்கள் முதலில் அணுகி, இந்தக்கதை சொல்ல வந்த போது, நான் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். மீண்டும் மீண்டும் கேட்டதால் கதை கேட்க ஒத்துக்கொண்டேன். அது தான் இன்று மெட்ராஸ் மாஃபியா கம்பெனி******

 எனக்கு சம்பளம் தந்துவிடுவீர்கள், டெக்னீஷின்களுக்கும் சரியாகத் தந்துவிடுவீர்களா? எனக்கேட்டேன், அதைச் சரியாகச் செய்துவிட்டார். மிக நல்ல மனது கொண்ட தயாரிப்பாளர். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். என்னுடன் இணைந்து பணியாற்றிய மனைவியாக நடித்த தீபா, சம்யுக்தா, ஆராதியா, என எல்லோருமே மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர். டெக்னீஷியன்கள் எல்லோருக்கும் நன்றி. ஶ்ரீகாந்த் தேவாவின் தாத்தாவோடு வேலை செய்துள்ளேன். அவரை சின்ன வயதிலிருந்து பார்த்து வருகிறேன் திறமைசாலி.  என்னால் பயந்து நடிக்கவும் முடியும், பயமுறுத்தவும் முடியும். அந்த திறமை உள்ளது. குழந்தையாக இருந்து பார்க்கிறோம் என எல்லோரும் சொல்வது பெருமையாக உள்ளது. பணம் மட்டும் முக்கியமில்லை, பணம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம், பணம் நிறைய வந்துவிட்டால் அது முக்கியமாகிவிடும் மகிழ்ச்சி போய்விடும். நான் நானாக வந்தவன் தான். என்னைப் பல பேர் முதுகில் குத்தியுள்ளார்கள், அதையெல்லாம் தாண்டித்தான் வந்துள்ளேன். மெட்ராஸ் மாஃபியா கம்பெனி குறித்த நேரத்தில் முடிக்கக் காரணம் இயக்குநர் தான். அவருக்கு நன்றி. கதைக்கு நாயகனாக நடித்துள்ளேன். நல்ல படம் என்று உங்களுக்குத் தோன்றினால் வாழ்த்துங்கள் நன்றி.

இயக்குநர் ஏ எஸ் முகுந்தன் பேசியதாவது..,  மெட்ராஸ் மாஃபியா கம்பெனி எனது முதல் படம். என் தயாரிபபாளர் அண்ணாதுரை ஒரு வழக்கறிஞர், ஆனால் சினிமாவை காதலிப்பவர். இந்தப்படம் இந்த அளவு சிறப்பாக முடியக் காரணம் அவர் தான். சம்பளத்தை அன்றைக்குக் கொடுத்துவிடுவார். அவர் நல்ல மனதுக்குப் படம் வெற்றி பெற வேண்டும். அவர் காசோடு மட்டுமில்லை கதையோடு வந்தார். அவர் சொன்ன லைன் நன்றாக இருந்தது.  6 மாதத்தில் படத்தை முடித்துவிட்டோம். இந்தக்கதைக்கு ஆனந்த்ராஜ் சார் நன்றாக இருப்பார் என்றேன், உடனே ஓகே சொல்லி அவரை அணுகினோம், முதலில் மறுத்தவர் கதை கேட்டு வந்தார். அவரால் என்ன வேண்டுமானாலும் நடிக்க முடியும். அற்புதமாக நடிப்பார். சம்யுக்தா போலீஸ் கதாபாத்திரத்திற்குச் சரியாக இருக்கும் என்று அணுகினோம் சிறப்பாகச் செய்துள்ளார். தீபா,  ஆராதியா  நன்றாக நடித்துள்ளார்கள். ஶ்ரீகாந்த் தேவா சம்பளமே வாங்காமல் ஒரு பாடல் செய்து தந்தார். நன்றி. குறித்த நேரத்தில் முடிக்கக் காரணமான கேமராமேன் அசோக்ராஜ் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.  ஒரு நல்ல படம் செய்துள்ளோம் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.