பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘யாதும் அறியான்’ படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் கே பி ஒய், ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வரும் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அடத்தின் அறிமுக நிகழ்வில் இப்படத்தின் இயக்குநர் கோபி பேசுகையில், “இந்த படத்தை குறிப்பிட்ட ஒரு பட்ஜெட்டில் செய்ததால், ஒரு காட்சியில், ஒரு பேப்பர் பதாகையில் விஜய்யை வைத்தேன். பெரிய பட்ஜெட்டாக இருந்தால் கிராபிக்ஸ், ஏஐ மூலம் அவரை காண்பித்திருப்பேன், பான் இந்தியா படமாக இருந்தால் முதல்வராக அல்லாமல் அவரை பிரதமராக காட்டியிருப்பேன். அதனால், விஜய் சாரின் ரெபரன்ஸ் எனது அடுத்தடுத்த படங்களில் இருக்கும். எங்கள் படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. சக்சஸ் மீட்டில் சந்திப்போம்.” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “இயக்குநர் கோபி விஜய் ரசிகர், விஜயின் விசயத்தை எங்கயாவது பதிவு செய்ய வேண்டும் ஒரு ரசிகராக, அதனால் தான் 2026 என்ற கான்சப்ட்டை வைத்திருக்கிறார். அவரது கனவு, ஆசை, நம்பிக்கை, விஜய் மீது உள்ள பற்று என்று எது வேண்டுமானாலும் சொல்லலாம். நான் விஜய் சாரிடம் ஒரு உதவி இயக்குநராக கதை சொன்னேன், அவர் கதையை ஓகே சொன்னதும் நான் இயக்குநராகி விட்டேன். படப்பிடிப்பு தொடங்கி விட்டது, அப்போது நான் அவரது ரசிகராகி விட்டேன். அப்படி மாறினால் தான் ரசிகர்களுக்கு ஏற்ற படத்தை கொடுக்க முடியும். திருப்பாச்சி கதையில், ஓபனிங் பாடல், பில்டப் ஆகியவை எதுவும் இல்லை. அவரது ரசிகரான பிறகு தான், அவரை ரசித்து, அவரது ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக பல விசயங்களை சேர்த்தேன். ஒரு ஆக்ஷன் படம், ஒரு மாஸ் ஹீரோவை வைத்து பண்ணும் போது, அந்த ஹீரோவை இயக்குநர் நேசிக்க வேண்டும், அப்போது தான் அந்த படம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக வரும். அதேபோல் காதல் காட்சிகள் நன்றாக வர வேண்டும் என்றால் அந்த ஹீரோயினை காதலிக்க வேண்டும், மனதளவில் பீல் பண்ணி ரசிக்க வேண்டும், அப்போது தான் நாம் அந்த காட்சியை எடுத்தால் ஆடியன்ஸ் ரசிப்பார்கள். இதுல கோபி இரண்டையும் செய்துவிட்டார். கதாநாயகியையும் லவ் பண்ணிட்டாரு, ஹீரோவையும் லவ் பண்ணிட்டாரு. இசை சிறப்பாக இருக்கிறது, மிரட்டியிருக்கிறார்கள். படத்தொகுப்பு உள்ளிட்ட அனைத்தும் நன்றாக இருக்கிறது. இயக்குநர் கோபி மிகப்பெரிய இயக்குநராவதற்கு அனைத்து தகுதியும் இருக்கிறது. தினேஷ் சார் பெரிய ஹீரோவாகி விடுவார். இயக்குநர் கோபி பெரிய ஹிட் படம் கொடுத்துவிட்டு, விஜய் கட்சியில் இணைந்து விட வேண்டும். செளந்தர்ராஜனும் விஜய் சார் கட்சியில் சீட் வாங்கி எம்.எல்.ஏ ஆகி, மண்ணுக்கும் மக்களுக்கும் நல்லது பண்ண வேண்டும், நன்றி.” என்றார்.
ஒளிப்பதிவு : எல்.டி இசை : தர்ம பிரகாஷ் கலை : நெல்லை லெனின் பாடல்கள் : எஸ்.கே.சித்திக் பி.ஆர்.ஓ : தர்மதுரை, சுரேஷ்சுகு