டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் -மாளவிகா மனோஜ் -ஆர் ஜே விக்னேஷ் காந்த்- ஷீலா- ஜென்சன் திவாகர் -ஆகியோரின் நடிப்பில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிட்ட ‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படம் உலகம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் டி. கே. டி. நந்தகுமார் மற்றும் எம். எஸ். கே. ஆனந்த் ஆகியோரின் இணை தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் தற்போது பதினைந்து கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வரும் நிலையில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் கலையரசன் தங்கவேல் பேசுகையில், ”கதாசிரியர் சிவக்குமார் முருகேசனுடன் இப்படத்தின் வெற்றியை பகிர்ந்து கொள்கிறேன். அவருடைய எழுத்தை நான் படமாக்கினேன். இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தை பார்த்து விமர்சனம் செய்த விமர்சகர்கள், திரையுலக பிரபலங்கள், டிஜிட்டல் திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.******
எனக்கு இந்த படத்தில் தயாரிப்பாளர்கள் எந்த அளவிற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது பற்றி மூன்று நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தப் படத்தில் எங்கும் விலங்குகள் தொடர்பான காட்சிகள் இல்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆடு கத்தும் காட்சி இடம் பிடித்திருக்கும். ஆடு கத்தும் குரல் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். ஆனால் இதற்கான பணிகள் அதிகம். செலவும் அதிகம். இருந்தாலும் என்னுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து விலங்குகள் நல வாரியத்திடம் முறையாக அனுமதி பெற்று அந்த காட்சிக்கு ஆதரவளித்தார்கள்.
பத்திரிகையாளர்களுக்கு இந்த படத்தை திரையிட்டு காண்பித்த பிறகு ஒரு சிறிய மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அந்த தருணத்தில் இந்தப்படம் கியூப் எனும் திரையிடும் தொழில்நுட்பம் மூலம் தமிழகம் முழுவதும் 180 திரையரங்குகளுக்கும் சென்று விட்டது. இதற்குப் பிறகு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றால் .. ஒரு பிரதிக்கு குறைந்தபட்சம் 15,000 செலவாகும். நான் இது தொடர்பாக கேட்டபோது என்னுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த நெருக்கடியான தருணத்திலும் எனக்கு ஆதரவளித்து திருத்தத்தை மேற்கொண்டார்கள்.
என் சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் சிறிய நகரம் என்றால் அது ஒட்டன்சத்திரம் தான். அங்கு இந்தப் படம் வெளியானால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்தேன். அதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்து எங்கள் ஊர் திரையரங்கில் இந்தப் படம் வெளியானது. தயாரிப்பாளர்கள் சினிமாவை வணிகமாக கருதாமல்.. நேசத்திற்குரிய படைப்பாக கருதியதால் தான் இது நடைபெற்றது. ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுவதற்காக சம்மதம் தெரிவித்தவுடன் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இப்படத்தின் முதல் பதாகை வெளியானதிலிருந்து இதுவரை தொடர்ந்து ஆதரவு தரும் ஊடகங்களுக்கு நன்றி. பத்திரிகையாளர் காட்சி திரையிட்ட பிறகு உங்களின் பாராட்டும், வாழ்த்தும் எங்களை உற்சாகமாக்கியது. அன்று இரவு நாங்கள் உறங்கவே இல்லை. மகிழ்ச்சியில் திளைத்தோம். இத்திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு நீங்கள் கொடுத்த முதல் பாராட்டு தான் காரணம். உங்களுடைய பாராட்டுகள் தான் தமிழக முழுவதும் பரவி இப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டது. படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து கொண்டாடி வரும் அனைத்து ரசிகர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.

