“ஹபிபீ” திரைப்பட விமர்சனம்

சாகுல்ஹமீத், கோவை இப்ராஹிம் ஆகியோரின் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்துரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ், தனஶ்ரீ, அனுஶ்ரீயா ராஜன், ஜெயஶ்ரீ பினுராஜ், அருள் குமார், ரேகா குமணன், இஸ்மத் பானு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஹபிபீ”. 1988 ஆம் ஆண்டில் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கண்ணாடி வாப்பா என்ற முகவரி வீட்டில் சொந்த தறியில் கையிலி நெய்யும் தொழிலாளியாக இருக்கிறார் முகம்மத் யூசுப் என்ற கதாபாத்திரத்தில் நடித்திதுக்கும் கஸ்தூரி ராஜா. அவரது மகனாக செய்யத் அபுதாஹிர் என்ற கதாபாத்திரத்தில் ஈசாவும், நிலோபர் நிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாளவிகாவும் வீட்டுக்குத் தெரியாமல் காதலிக்கிறார்கள். சில ஆண்டுகள் கழித்து கைத்தறிக்குப் பதிலாக விசைத்தறி வந்ததால் கைத்தறிக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது. இதனால் குடும்ப செலவுகளை சமாளிக்க கூட்டுக்குடும்பமாக இருக்கும் கஸ்தூரிராஜாவின் தம்பி,  அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்கிறார். இக்காலகட்டத்தில் ஈசா மாளவிகாவின் காதல் அவர்களின் வீட்டுக்கு தெரிய வருகிறது. இதனால் இருவீட்டாருக்குமிடையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு காதல் முறிவு பெறுகிறது. அதனால் விரக்தியடைந்த ஈசா அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்கிறார். சில ஆண்டுகள் கழித்து ஈசாவும் ஊருக்கு திரும்பி வருகிறார். அப்போது அவருக்கு திருமணம் செய்து வைக்க கஸ்தூரிராஜா முடிவு செய்கிறார். அதன்படி கதீஷா பர்வீன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனஶ்ரீயை பெண் பார்க்கிறார்கள். தனஶ்ரீயும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க கல்யாண வேலைகள் தடபுடலாக நடந்து வருகிறது. திருமணம் நடக்கபிருக்கும் ஒருநாளைக்கு முன்பாக அந்த திருமணமும் நின்றுபோய்விடுகிறது. அந்த திருமணம் ஏன் நின்றது? ஈசா காதலித்த மாளவிகா என்ன ஆனார்? கஸ்தூரிராஜா என்ன ஆனார்?

என்பதுதான் கதை. இஸ்லாமிய குடும்பத்தில் மட்டுமல்ல ஒரு இஸ்லாமிய ஊரில் நடக்கும் உண்மையான நிகழ்வுகளை, தங்க நகையை அலங்கரிப்பதுபோல் மிகவும் அழகாக திரையில் அலங்கரித்திருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன். 1988 ஆண்டு காலகட்டத்தில் இஸ்லாமிய பெண்கள்,  ஆண்கள் எதிரே வந்தால் தலைகுனிந்து முகத்தை மூடிக்கொண்டு ஒதுங்கி போவார்கள். அதை அப்படியே இப்போது திரையில் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு காட்சியும் உண்மையோடு ஒன்றிப்போனதால்,  படத்தைப்பார்ப்பவர்களும் திரைக்குள் தாமும் இருப்பதாக உணரவைக்கிறது. முகமத் அமீனின் உரையாடல்கள் இஸ்லாமிய கலாச்சாரத்தை தூக்கி நிறுத்துகின்றன. ஆனாலும் இது ஒரு இஸ்லாமிய மார்க்கத்தைப்பற்றிய கதையல்ல என்றும் தற்காலத்தில் இஸ்லாமிய குடும்பத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிகழ்வுகளைதான் திரையில் காட்டியுள்ளதாக கதாசிரியர் முகமத் அமீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது பாராட்டுதலுக்குறியது. வி.எஸ்.மதியின் சீரான படத்தொகுப்பு பாராட்டுதலுக்குறியது. நாகூர் அனிபாவின் பாணியில் இசையமைத்திருக்கும் சாம். சி.எஸ். ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமிக்கு பாராட்டுக்கள். படத்தில் கட்டிப்பிடிக்கும் காதல் காட்சிகளும் இல்லை. கட்டிப்புரளும் சண்டை காட்சிகளும் இல்லாமல் இரண்டேகால் மணி நேரம் போனதே தெரியாமல் படத்தை இயக்கியிருக்கிறார் மீரா கதிரவன். கஸ்தூரி ராஜாவின் எதார்த்தமான நடிப்பு என்று சொல்வதைவிட, திராவிட யூசுப்பாக வாழ்ந்திருக்கிறார். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பதுபோல, திரையில் செத்தும் வாழ்ந்திருக்கிறார் கஸ்தூரி ராஜா. அடக்கமும் பொறுமையும் இஸ்லாமியர்களின் சொத்து என்பதை திரையில் காட்டியிருக்கிறார் ஈசா. இஸ்லாமிய பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை திரையில் வடிவமைத்து இருக்கிறார்கள் மாளவிகாவும் தன்ஶ்ரீயும். அனைவரும் குடும்பத்க்துடன் சென்று பார்க்க வேண்டிய படம் “ஹபீபி”.