“இந்திரா” திரைப்பட விமர்சனம்

ஜாபர் சாதிக், இர்பான் மாலிக் தயாரிப்பில் சபரிஷ் நந்தா இயக்கத்தில் வசந்த் ரவி, சுனில், மெஹ்ரின் பிர்ஷடா, அனிகா சுரேந்திரன், கல்யாண் குமார், ராஜ்குமார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “இந்திரா”. காவல்த்துறை ஆய்வாளராக இருக்கும் வசந்த் ரவி அதிக குடிப்பழக்கம் கொண்டவராக இருக்கிறார். மதுமயக்கத்தில் காரையோட்டிச் சென்று விபத்தை உண்டாக்கியதால் தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டு வீட்டில் எப்போதும் மது குடித்துக் கொண்டே இருக்கிறார். இதனால் அவரது மனைவி மெஹ்ரின் பிர்ஷடா அவருடன் எதுவும் பேசாமல் இருக்கிறார். இதனால் விரக்தியின் உச்சத்துக்குச் சென்ற ரவிக்கு அதிக ரத்தக் கொதிப்பு ஏற்பட்டு இரு கண்களின் பார்வையையும் இழந்து விடுகிறார். பார்வையிழந்த கணவனுக்கு பக்கத்துணையாக இருந்து ரவியை பராமரித்துக்கொள்கிறார் மெஹ்ரின். இதற்கிடையில் துன்புறுத்தி இன்பம் காணும் மனநிலை கொண்ட சுனில், பல நபர்களை கொலை செய்து திரிகிறார். கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் காவலர்கள் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், வசந்த் ரவியின் மனைவி மெஹ்ரினும் உள்பக்கமாக மூட்டியிருக்கும் தன் வீட்டுக்குள்ளேயே கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கிறார். அந்த வீட்டுக்குள் பாரவை இழந்த ரவி மட்டுமே இருந்திருக்கிறார். அப்படியானால் மெஹ்ரின கொலை செய்தது யார்? என்பதை கண்டுபிடிப்பதுதான் மீதிக்கதை.  வசந்த் ரவியின் துடிப்பான நடிப்பு கைத்தட்ட வைக்கிறது. உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் அவரின் உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளும் நடிக்கின்றன என்று சொல்வதைவிட துடிக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். அவ்வளவு தத்ரூபமான நடிப்பை திரையில் கொட்டி தீர்த்திருக்கிறார். அதற்கு உறுதுணையாக இருப்பது அஜ்மலின் இசைதான். கதையோடு பின்னி பிசைந்திருக்கிறது அவரின் இசை. கொலைகாரனாக நடித்திருக்கும் சுனில், வித்தியாசமான் வில்லத்தனத்தை திரையில் காட்டியிருக்கிறார்.  கணவன் மீது கோபப்படும்போதும் பிறகு கணவனை நன்கு பராமரித்துக் கொள்ளும் காட்சியிலும் தாய்க்குலத்தின் தனித்தன்மையை அழகாக வெளிபடுத்திநடித்திருக்கிறார் மெஹ்ரீன். படத்தின் முதல் பாதியிலேயே கதை முடிகிறது போல் காட்டி, இரண்டாம் பாகத்திற்கு கதை தொடர்வதை காட்டும் திருப்பம் மிக அருமை. இதில் கைத்தட்டலை பெறுகிறார் இயக்குநர் சபரிஷ் நந்தா. இரண்டாம் பாகம் முழுவதும் காட்சிக்கு காட்சி பல அதிரடி திருப்பங்களை வைத்து பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு உட்கார வைத்துவிட்டார் இயக்குநர். துப்பறிவுதல் பிடிக்கும் ரசிகர்களுக்கு இப்படம் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா போல் சுவைக்கும். துப்பறிதலுக்கு இப்படம் ஒரு மணிமகுடம்.