தங்க முகையதீன்
டி.ராதாகிருஷ்ணனின் தயாரிப்பில் கார்த்தீஸ்வரன் இயக்கத்தில், கார்த்தீஸ்வரன், ஶ்ரீநிதி, ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுளா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ” நிர்வாகம் பொறுப்பல்ல”. பாண்டியின் கைத்தொலைபேசி காணொளியில் கிர்ல், தான் ஆடையின்றி நிற்பதைக்காட்ட பெரும் தொகையை ஜிபே செய்யச் சொல்கிறாள். பாண்டியனும் சபலத்தால் பணத்தை அனுபியவுடன் காணொளிக் காட்சியை அடைத்து விடுகிறாள். பாண்டியனும் பெரும் தொகையை இழக்கிறான். அடுத்து கோழிப்பண்ணை நடத்திவரும் ஆவுடையப்பன் போலி விளம்பரத்தை நம்பி அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.50 லட்சத்தை இழந்ததால் மாரடைப்பு வந்து மரணமாகிறார். இப்படி பலரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் கேவ்வை காதலித்த மோகினி ரூ.500 கோடியை இழக்கிறாள். இப்படி பொதுமக்களை ஏமாற்றி 9 ஆயிரம் கோடி பணம் சம்பாதித்த கேவ் இறுதியில் என்ன ஆனார்?. அவரின் பின்னணி என்ன? அவர் பலரை ஏமாற்றியதற்கு என்ன காரணம் என்பதை சொல்வதுதான் “நிவாகம் பொறுப்பல்ல” திரைப்படத்தின் கதை. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்கிறார் இயக்குநர். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்படுபவர்கள் இறுதியில் என்ன ஆகுகிறார்கள் என்பதை கேவ்வாக நடித்திருக்கும் இயக்குநர் கார்த்தீஸ்வரன் பொதுமக்களுக்கு இப்படத்தின் முலம் ஒரு படிப்பினைப் பாடம் நடத்தியிருக்கிறார். பலதரப்பட்ட வேடங்களில் வந்து ஏமாற்று வேலையில் ஈடுபடும் காட்சிகளில் அளவுக்கு மீறிய நடிப்பால் ரசிகர்களின் மனதில் நிற்க முடியவில்லை. ஆவுடையப்பனாக நடித்திருக்கும் லிவிங்ஸ்டன் உழைக்காமல் கிடைக்கும் பணத்துக்கு ஆசைப்பட்டு அலப்பறை செய்யும் காட்சியிலும் பிறகு மொத்தப் பணத்தையும் இழந்து தவிக்கின்ற காட்சியிலும் தனது அனுபவ நடிப்பால் அசத்தியுள்ளார். பாண்டியாக நடித்திருக்கும் பிளாக் பாண்டி தனது கதாபாத்திரத்தை கலகலப்பாக்கியிருக்கிறார். மிருதுளாவுக்கு போதிய வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. காவல்த்துறை ஆய்வாளராக வரும் ஶ்ரீநிதி தனது எடுப்பான தோற்றத்தில் துடிப்பாக நடித்து இளசுகளின் மனதில் நிற்கிறார். 9 ஆயிரம் கோடிக்கு அதிபதியாகயிருக்கும் ஒரு மோசடி மன்னன், காவல்த்துறை ஆணையரின் தோளில் கைபோட்டு பேசுவது அதிகப்பிரசங்கித்தனமானது. ஆனால் உச்சக்கட்ட காட்சியில் அதை சரிசெய்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. இந்த உலகம் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாறுகிறது. அதிலிருந்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காகவே இப்படத்தை தந்துள்ளார் இயக்குநர் கார்த்தீஸ்வரன். (ஏமாற்றுபவன் திருந்திவிட்டால், ஏமாறுபவன் இருக்க மாட்டான். அதுவரை இப்படம் ஒரு ஏட்டுச் சுரைக்காய், கறிக்கு உதவுமா? இயக்குநரே?)

