மருதம் புரடெக்ஷன் சார்பில் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், சிருஷ்டி டாங்கே, யோகிபாபு, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், மஹிமா குப்தா, விஜய் சேயோன், அல்ஃப்ரெட் ஜோஸ், சுபாங்கி ஜா, சிவகிருஷ்ணா, இலக்கியா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மகாசேனா”. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள குரங்கனி கிராமத்தில் நரபலி கொடுக்கும் ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு தலைவியாக மஹிமா குப்தா இருக்கிறார். மலையின் நடுப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் தலைவனாக விமல் இருக்கிறார். அவர் சோனா என்ற யானைய வளர்த்து வருகிறார். விமலின் ஊரில் யாழிஸ்வரன் கோவில் உள்ளது. அந்த கோவிலிருக்கும் யாழிஸ்வரன் சிலையை கடத்தி தனது கிராமத்துக்கு கொண்டுவர மஹிமா பலமுறை முயற்சித்தும் விமலிடமிருந்து அந்த சிலையை கடத்திவர முடியவில்லை. இதற்கிடையே வனத்துறை அதிகாரியாக இருக்கும் ஜான் விஜய் அந்த சிலையை கடத்தி பெரும் செல்வந்தரான கபீர் துஹானுக்கு விற்க முயற்சிக்கிறார். அந்த சிலையின் பின்னணிக் கதை என்ன? சிலையை மஹிமா அடைந்தரா? இல்லையா? அந்த சிலை யாருக்கு கிடைத்தது என்பதுதான் கதை. விமலின் கதாபாத்திரம் வலுவானது. அந்த கதாபாத்திரத்திற்கு, நெளிவு சுளிவு இல்லாத உடல்மொழியைக் கொண்ட விமலால் ஈடுகொடுத்து நடிக்க முடியவில்லை. முக்கிய இடங்களில் நடிக்காமல் நின்று கொண்டேயிருக்கிறார். கதாபாத்திரத்திற்கேற்ற நாயகனை தேர்வு செய்யப்படவில்லை இது இயக்குநரின் குற்றம்தான். சிருஷ்டி டாங்கேதான் நடித்திருக்கிறார். மகள் இலக்கியா இறந்துகிடக்கும் காட்சியில் விமலின் அழுகையும், சிருஷ்டியின் அலறலும் உண்மயானதாக இருக்கிறது. படத்துக்கு மிகவும் பலம் சேர்த்திருப்பது மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அழகும், அதை திரையில் காட்டிய ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபுவின் உழைப்பும்தான். அருமையான ஒளிப்பதிவு. யோகிபாபுவின் நகைச்சுவையும் சுமாராகத்தான் இருக்கிறது. படத்தொகுப்பாளர் தூக்கத்திலேயே வேலை செய்திருப்பார் போலிருக்கிறது. அதை இயக்குநர் கவனிக்க தவறியிருக்கிறார். ஜான் விஜய்யின் நடிப்பு நையாண்டித்தனமாக உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசிக்க படத்தைப் பார்க்கலாம். உச்சக்கட்ட காட்சியை உற்சாகமில்லாமல் இயக்கியிருக்கிறார் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன்.
“மகாசேனா” திரைப்படம் விமர்சனம்
