“பரிசு” திரைப்பட விமர்சனம்

கலா அல்லூரி இயக்கத்தில்  ஜான்விகா, ஜெய் பாலா, கிரண் பிரதீப், சுதாகர் ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ட்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்னப் பொண்ணு   ஆகியோர் நடித்துள்ள படம் “பரிசு”.  ஓய்வு பெற்ற ஆணுவ அதிகாரி ஆடுகளம் நரேனின் மகள் ஜான்விகா. கலைக்கல்லூரியில் படித்து வரும் ஜான்விகா படிப்பிலும் விளையாட்டிலும் முதல் மாணவியாக இருக்கிறார். அவருடன் படிக்கும் மாணவர்கள் ஜான்விகாவின் காதலைப் பெற துடிக்கிறார்கள். ஆனால் ஜான்விகா அதற்கு இடங்கொடுக்காமல் படிப்பிலும் விளையாட்டிலும் தனது முழுக்கவனத்தையும் செலுத்தி கல்லூரிக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கிறார். தனது தந்தையைப்போல் தானும் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற கனவில்  உடற்பயிற்சி, குறி தவறாமல் துப்பாக்கி சுடுவது போன்றவற்றில் பயிற்சி பெற்றுவரும் நிலையில்,  ஒரு மருத்துவர் வாகன விபத்தில் சிக்கி மயங்கிக்கிடப்பதை பார்க்கிறார். உடனே அவசர மருத்துவ ஊர்தியை வரவழைத்து மருத்துவமனையில் சேர்க்கிறார். அந்த மருத்துவர் விபத்தில் அடிபட்டு மயங்கிக்கிடந்த இடத்தில் ஒரு கோப்பு சேமிப்பகத்தை (பென்ட்ரைவ்) கண்டெடுக்கிறார். அந்த சேமிப்பகத்தில் என்ன பதிவாகியிருக்கிறது? விபத்தில் சிக்கிய மருத்துவர் யார்? அந்த விபத்து தற்செயலாக நடந்ததா? இல்லை கொலை முயற்சியா? ஜான்விகா ராணுவத்தில் செர்தாரா? இல்லையா? என்பதுதான் கதை. இப்படம் முழுக்க முழுக்க ஜான்விகாவுக்காகவே எடுக்கப்பட்ட படம். படத்தின் மொத்த கதையையும் தோளில் மட்டுமல்ல தலையில் சும்மாடுகட்டி சுமந்து செல்கிறார் ஜான்விகா. பருவ பெண்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் தனது லட்சியப்பாதையில் நடந்து செல்லவேண்டும் என்பதை இயக்குநர் இப்படத்தின் வாயிலாக பெண்களுக்கு சொல்லியிருப்பது பாராட்டுதலுகுறியது.  குடும்பப பாங்கான தோற்றத்தில் துடிப்பான கல்லூரி மாணவியாகவும் பிறருக்கு உதவும் இரக்க குணம் கொண்ட பெண்ணாகவும், துப்பாக்கி சுடுதலில் துடிப்புள்ளவராகவும், தந்தையின் கனவை நிறைவேற்றப் பாடுபடும் ஒரு மகளாகவும், விவசாயியாகவும், ராணுவ வீரராகவும் வருகிறார். பல்வேறு தோற்றங்களில் வெளிப்பட்டு அந்தப் பாத்திரத்தின் இயல்பை உணர வைக்கிறார். எதையும் புன்னகையுடன்  எதிர்கொள்ளும் நிதானமானகுணம் கொண்டவராக இருந்தாலும் சண்டைக் காட்சிகளில் எதிரிகளைப் பந்தாடும்போது வேறொரு அவதாரமாகத் தோன்றுகிறார். ராஜேஷ் பாத்திரத்தில் வரும் ஜெய் பாலா ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் கவர்கிறார். மனோபாலா, சின்னப்பொண்ணு ஜோடிக்கு மகனாக வரும் சென்ட்ராயன் இணைந்த கூட்டணி சிரிக்க வைக்க முயல்கிறார்கள். ஆனால்  பெரும்பாலும் பேசும் வசனங்கள் உருவக்கேலியாகவே  உள்ளன. அந்த நகைச்சுவைக் கூட்டணியைச் சரிவரப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.