திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம் – இயக்குனர் பேரரசு

நாட்டில் நடக்கும்  தொடர் வன்முறைக்கு அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும், காவல் துறையையும்  சமூக அவலங்களையும் மட்டும்  குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதற்கு சினிமாவும் பொறுப்பேற்க வேண்டும்! சில சினிமாக்களும் இதுக்கு காரணம் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ரஜினிகாந்த் விஜயகாந்த் போன்ற பல கதாநாயகர்கள் படங்கள் வந்திருக்கிறது. அப்போதெல்லாம் இப்படி வன்முறையான சண்டைக் காட்சிகள் இருந்ததில்லை. தற்பொழுதைய சில திரைப்படங்களில் வன்முறை! வன்முறை!! வன்முறை!!! திரைப்படங்களுக்கு குழந்தைகளை அழைத்துப் போகவே பயமாக இருக்கிறது!  வன்முறையை தூண்டும் படங்களும், நாட்டில் ஒற்றுமை குழைக்கும் படங்களும் பிரிவினையை தூண்டும் படங்களும், ஆபாச வசனங்களை அள்ளித் தெளிக்கும் படங்களும், படம் முழுக்க குடித்துக் கோண்டே இருக்கும் காட்சிகளும், கதாநாயகர்களே போதைப்பொருள் கடத்துவதும் நாட்டில் வன்முறைக் கலாச்சாரம் அதிகரிப்பதற்கு காரணமாகின்றன என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை*******

கம்பராமாயணம் படமாக்கப்பட்டிருக்கிறது, மகாபாரதம் படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் வரும் யுத்த களத்தில் ஆயிரக்கணக்கான பேர் மோதிக் கொண்டாலும், பலியானாலும் எதிலுமே முகம் சுழிக்கும் வன்முறை தெரிந்ததில்லை! கலிங்கத்துப் போரைவிடவா சண்டை இருந்துவிடப் போகிறது? ராணுவ சண்டை காட்சிகள் நிறைந்து எத்தனை படம் வந்திருக்கிறது? அதில் எங்கே வன்முறை கண்டோம்?  சமூகத்தின் மீது அரசாங்கத்திற்கு எந்த அளவிற்கு அக்கறை இருக்கிறதோ! அதே அளவு திரைப்பட இயக்குனர்களுக்கும், முக்கியமாக அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களுக்கும் வேண்டும்! வன்முறை இல்லாத சண்டை காட்சிகள் அமைப்பதே சினிமாவுக்கு ஆரோக்கியம்! சமூகத்திற்கும் ஆரோக்கியம்!