ராகுல் தேவா, பிரசாத் ராமச்சந்திரன், தயாரிப்பில் ஏ.ஆர்.ராகவேந்திரா இயக்கத்தில் நாகராஜன் கண்ணன், டெல்லி கணேஷ், மு.ராமசாமி, மருத்துவர் எஸ்.கே.காயத்ரி, சாய் தீனா, ஐஸ்வரியா ரகுபதி, கார்த்திக் சீனிவாசன், ரேகா குமரேசன், தினேஷ் செல்லையா, மிருதுளா, பரகோத்தீஸ்வரன், அந்தோணி ஜானகி, முருகன் கோவிந்தசாமி, கே.கோபால், மணிகண்டன் வீரமுத்து ஆக்யோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மாயக்கூத்து”. டெல்லி கணேஷ் ஒரு பத்திரிகை ஆசிரியர். அவரது பத்திரிக்கைக்கு நாகராஜன் கண்ணன் ஒரு தொடர்கதை எழுதி வருகிறார். அந்த கதையில் மூன்று விதமான கதாபாத்திரங்களை படைக்கிறார் எழுத்தாளர் நாகராஜன் கண்ணன். முதல் கதாபாத்திரம் கல்விக்கட்டணம் கட்டமுடியாத ஒரு ஏழை மாணவி மிருதுளா மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார். இரண்டாவது கதாபாத்திரம் வீட்டு வேலைக்காரியாக வரும் ஐஸ்வரியா ரகுபதி எஜமானியிடம் திருட்டுப்பட்டம் வாங்குகிறார். மூன்றாவது கதாபாத்திரம் ஒரு பிரபலமானவரை கொலை செய்து அதன்முலம் கிடைக்கும் மிகப் பெரிய தொகைக்காக வேலை செய்துவரும் ரவுடி சாய் தீனா. இந்த மூன்று கதாபாத்திரங்களோடு ஒரு சில துணை கதாபாத்திரங்களையும் படைக்கிறார் எழுத்தாளர். இந்த மூன்று கதாபாத்திரங்களையும் தனது வக்கிரபுத்தியோடு சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் கதாபாத்திரங்களாக படைக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கதாபாத்திரங்கள் அவர்முன் தோன்றி எழுத்தாளர் நாகராஜன் கண்ணனை பழிவாங்குகிறார்கள். அதிலிருந்து தப்பிக்க எழுத்தாளர் என்ன செய்தார்? என்பதுதான் இப்படத்தின் கதை. இதுவரை திரைப்படங்களில் வராத ஒரு புதுமையை புகுத்தி அற்புதமாக விளையாடியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.ராகவேந்திரா. இப்படி ஒரு கதை தமிழ் சினிமாவில் இப்போதுதான் அரங்கேறியுள்ளது. இதில் நடித்த டெல்லி கணேஷ், சாய் தீனா தவிர ஏனைய நடிகர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட புதுமுக நடிகர்கள்தான். இப்படத்தின் கதாநாயகன் நாகராஜன் கண்ண்ன் என்பதைவிட, இயக்குநர் எழுதிய வசங்கள்தான் உண்மையான கதாநாயகன் என்று சொல்ல வேண்டும். பார்வையாளர்களின் மனதில் தோன்றும் எண்ணங்களை திரையில் பிரதிபலிக்க செய்திருக்கிறார் இயக்குநர். அஞ்சனா ராஜகோபாலனின் இசையும் நாகராஜன் மற்றும் கபிர் வாசுகியின் பாடல் வரிகளும் படத்துக்கு மேலும் மெருகூட்டுகின்றன. தமிழ்த் திரைத்துறையின் புதுமையான படைப்புக்கு அடித்தளம் போட்ட படம் “மாயக்கூத்து”. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக ஓடவிட்டிருக்கிறார்கள். அடுத்தக்கட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்திருக்கிறார்கள்.
“மாயக்கூத்து” திரைப்பட விமர்சனம்
