(தங்க முகையதீன்)
கிச்சா கிரியேஷன்ஸ், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப், சைன் டாம் சாக்கோ, நவீன் சந்திரா, விக்ராந்த், யோகிபாபு, குருசோமசுந்தரம், அருள்தாஸ். ஆதிகேசவன், சி.எம்.குமார், சுப்பு பஞ்சு, ரிஷ்விகா நாயுடு, ரோஷினி பிரகாஷ், தீப்ஷிகா, அர்ச்சனா கொட்டிகே, கிருஷ்ணப்பிரியா, ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மார்க்”. கிச்சா சுதீப் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர். கர்நாடகாவிலுள்ள மங்களூரில் பிரபலமான ரவுடியாக இருக்கும் நவீன் சந்திராவின் தம்பி விக்ராந்த் 18 சிறுவர்களை கடத்தி ஆற்றங்கரையோரமுள்ள ஒரு இடத்தில் அடைத்து வைக்கிறார். அடைத்து வைத்த 18 மணி நேரத்துக்குள் சிறுவர்கள மீட்காவிட்டால் 18 குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்து விடும்படியான ஒரு அமைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். இது ஒருபுறமிருக்க, விக்ராந்தின் அண்ணன் நவீன் சந்திராவின் ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை காவல்த்துறை ஆய்வாளர் மடக்கிப்பிடித்து மங்களூர் காவல் நிலையத்தில் வைத்திருக்கிறார். இதுவொருபுறமிருக்க மறுபுரத்தில், மருத்துவமனையில் கர்நாடக முதலமைச்சர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். முதலமைச்சரின் மகன் ஷைன் டாம் சாக்கோ, தானே முதலமைச்சராக ஆகவேண்டுமென்ற ஆசையில் விஷ ஊசிபோட்டு முதலமைச்சரான தன் தாயையே கொலை செய்கிறார். அந்தக் கொலை காட்சியை ஒரு மருத்துவர் தனது கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துவிட்டு தப்பித்து விடுகிறார். இந்த மூன்று நிகழ்வுகளையும் ஒரே புள்ளியில் இணைக்கிறார் இயக்குநர் விஜய் கார்த்திகேயா. நவீன் சந்திரா, விக்ராந்த், ஷைன் டாம் சாக்கோ ஆகிய இந்த மூன்று வில்லன்களையும் கிச்சா சுதீப் எப்படி எதிர்கொண்டார்? அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறுவர்கள் மீட்கப்பட்டார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை. சண்டைக் காட்சிகளால் படத்தை நிரப்பியிருக்கிறார்கள். வித்த்கியாசமான சணடைக் காட்சிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்கிறது. குறிப்பாக காவல் நிலையத்தில் நடக்கும் சண்டை அதைத்தொடர்ந்து பாலத்தின்மீது நடக்கும் சண்டை காட்சிகளில் தனித்து போராடும் காட்டுச்சிங்கமாக கிச்சா சுதீப் எதிரிகளை பந்தாடும் காட்சிகள் ரசிகர்களை கைத்தட்ட வைக்கிறது. சண்டைக் காட்சிக்கு முத்தாப்பு வைத்த காட்சி, கோயில் திருவிழாவில் பாட்டுப்பாடி நடனமாடியபடி கிச்சா சுதீப் சண்டையிடுவது இதுவரை வந்துள்ள மற்ற திரைப்படங்களில் வராத சண்டைக்காட்சியாகும். கடத்தப்பட்ட சிறுவர்கள்தான் படத்தின் கரு. ஆனால் இரண்டுமணி நேர கதை ஓட்டத்துக்கு சிறுவர்களை மட்டுமே நம்பாமல் பல துணைக்கதைகளை சொருகியிருக்கிறார்கள். படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருப்பது பாடல்களும் பின்னணி இசையும்தான். ரசிகர்களை திரையரங்கில் துள்ளாட்டம் போடவைத்திருக்கிறார் இயக்குநர். இரவு நேர ஒளிப்பதிவும் ஆற்றங்கரை வெள்ளக்காட்சியையும் தத்ரூபமாக படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். தேர்ச்சி பெறுதலுக்குறிய மார்க்கை வாங்கியிருக்கிறார் இயக்குநர் விஜய் கார்த்திகேயா.

