சியா புரடெக்ஷன் தயாரிப்பில் விஜய் சுகுமார் இயக்கத்தில் லியோ சிவகுமார், காயத்ரி ரெமோ, ஆரியன், கஜராஜ், ரமா, அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயக்குமார், பொன்சுரேஷ், அரங்க குணசீலன் ஆகியோரின் நடிப்பொல் வெளிவந்திருக்கும் படம் “மாண்புமிகு பறை”. சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஆதிகாலத்து மனிதர்கள் வேட்டையாடிய மிருகங்களின் இறைச்சியை சாப்பிட்டுவிட்டு, அந்த மிருகத்தின் தோல்களை வீசிவிடுவார்கள். அந்த தோல்கள் வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து தானாகவே பதப்பட்டு கிடக்கும்போது, அதில் காற்றுமோதி அதிர்வு ஏற்பட்டு ஒலி எழும்பியது. அந்த ஒலி மென்மையாக இல்லாமல் அதிர்வாக இருந்தது. காலப்போக்கில் அந்த தோல்களை மனிதர்களே காயவைத்து மரவளையத்தில் கட்டி சூடேற்றி குச்சிகளால் அடித்து ஒலியை எழுப்பினார்கள். அந்த ஒலிக்கேற்ப கால்களால் பூமியை தட்டி ஆட்டம்போட்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த தோலிசைதான் ஆதிகாலத்து மனிதர்கள் முதன்முதலாக பயன்படுத்திய இசைக்கருவியாகும். காலப்போக்கில் தங்களது கூட்டத்தார்களை ஒன்றுகூட்டுவதற்காக இந்த தோலிசைக்கருவியை அடித்து ஒலியெழுப்பி அழைப்புக்கு பறைசாற்றுவார்கள். அதனால் இத்தோல்கருவி “பறை” என்று பெயர்பெற்றது. பிற்கலத்தில் உயர்குடிமக்கள் ஊர்மக்களுக்கு அழைப்புவிடுக்க தாழ்த்தப்பட்ட மக்களிடம் இந்த பறைக்கருவியை கொடுத்து அழைப்புவிடுக்கச் சொன்னார்கள். பிறகு சாவுவீட்டுக்கு அடிக்கச் சொன்னார்கள். இப்படியாக ஆதிமனிதன் இசைத்த இந்த தோல்கருவி இப்போது சாவு வீட்டுக்கு பயன்பட்டு வருகிறது. இந்த இழிவு நிலையிலிருந்து மீள்வதற்குத்தான் இந்த பறை கருவிக்கு “மாண்புமிகு” என்ற உயர்ந்த சொல்லை அடைமொழியாக்கி “மாண்புமிகு பறை” என்ற பெயரில் படம் வெளிவந்துள்ளது. இப்படத்தின் கதாநாயகனாக திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவகுமார் நடித்துள்ளார். இவருக்கு மனைவியாக காயத்ரி ரெமோ நடித்துள்ளார். சிவகுமாருக்கு நண்பனாக ஆரியன் நடித்துள்ளார். கதைப்படி ஆரியன் பறையிசைப் பாடசாலை ஒன்றை நடத்திவருகிறார். அவரை உயர்குடியில் பிறந்த காயத்ரி ரெமோ காதலித்து களவுத்திருமணம் செய்துகொண்டு சிவகுமாருடன் வாழ்ந்து வருகிறார். இந்த பறையிசையை சாவு வீட்டுக்கு அடிக்கக்கூடாது என்ற கொள்கையுடன் இருக்கிறார். இது அந்த ஊரிலுள்ள உயர்குடி வகுப்பினருக்கு பிடிக்கவில்லை. ஆதலால் உயர்குடிமக்கள் இவர்களை என்ன செய்தார்கள் என்பதுதான் கதை. லியோ சிவகுமார் தனது நடிப்பில் அதிக ஆர்வம்காட்டி நடித்துள்ளார். உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் அவர்து கண்கள் அலைமோதுகின்றன. பாட்டியிடும் காட்டும் பாசத்திலும் மனைவி காயத்ரியிடம் ஊடலுக்கு அழைக்கும் காட்சியிலும், நண்பன் ஆரியனின் மரணத்தில் அழுகின்ற காட்சியிலும் தன் உடல்மொழியால் அசத்தியிருக்கிறார். பாடலுக்கு ஆட்டம்போடும் காட்சியிலும் கைத்தட்டலை பெறுகிறார். காயத்ரி தனது கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி நடித்து கைத்தட்டலை பெறுகிறார். உச்சக்கட்ட காட்சியில் அவர் ஆடும் பறையிசை ஆட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது. தாழ்த்தப்பட்ட குடிமக்கள் நிலை உயர என்ன செய்ய வேண்டும் என்பதை இயக்குநர் சொல்லாமல் கதையை முடித்திருக்கிறார். குட்டக்குட்ட குனிந்துகொண்டேதான் இருக்கவேண்டுமா? இயக்குநரே.
“மாண்புமிகு பறை” திரைப்படம் விமர்சனம்
