-தங்க முகையதீன்-
ஶ்ரீ பட்டவன் தயாரிப்பில் செல்லக்குட்டி இயக்கத்தில் சாக்ஷி அகர்வால், விஜய் விஷ்வா, ரோபோ சங்கர், யோகி பாபு, செல்லக்குட்டி, தங்கதுரை, அம்பிகா, மிரட்டல் சிவா அகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சாரா”. பள்ளிப்பருவம் முதல் பருவ வயதுவரை காதலைவிட நட்புதான் மேலானது என்று நினைத்து சாக்ஷி அகர்வாலுடன் உற்ற நண்பனாக பழகிவருகிறார் செல்லக்குட்டி. ஆனால் அம்மா அம்பிகா தனது மகன் செல்லக்குட்டியிடம் “உனது தோழி சாக்ஷி அகர்வாலை திருமணம் செய்துகொள் அதுதான் எனது ஆசை” என்று கூறுகிறார். ஆனால் சாக்ஷி அகர்வால் விஜய் விஷ்வாவை காதலிக்கிறாள். அம்மாவின் ஆசையை நிறைவேற்ற செல்லக்குட்டி, தனது தோழியை திருமணம் செய்தாரா? இல்லையா? சாக்ஷி அகர்வால் தனது காதலன் விஜய் விஸ்வாவை கரம்பிடித்தாரா? இல்லையா? அம்பிகா என்ன ஆனார் ? என்பதுதான் கதை. சாக்ஷி அகர்வால் தனது கதாபாத்திரத்தோடு ஒன்றிப்போய் நடித்துள்ளார். செல்ல்க்குட்டிதான் இப்படத்தின் இயக்குநர். அதனால் அவரை கேள்வி கேட்க முடியாததால் வெறித்தனமாக நடித்து உச்சக்கட்ட காட்சியில் காதலுக்கு காணிக்கை, உயிரைவிட மேலானது ஒன்றுமில்லை என்று நடிக்கும் காட்சியில் கைத்தட்டலை பெறுகிறார். அம்பிகா அலட்டிக் கொள்ளாமல் அளவோடு நடித்திருக்கிறார். ரோபோ சங்கரின் நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்க முடியவில்லை. கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக நடித்து கொடுத்திருக்கிறார். நகைச்சுவையின் ஆறுதலுக்கு யோகிபாவு கைகொடுத்திருக்கிறார். படத்தில் இசை தண்டோரா போடுகிறது. கவனமில்லாத திரைக்கதை தொகுப்பும், அளவுக்கு அதிகமான பின்னணி இசையும் பார்வையாளர்களின் கண்கள் அவ்வப்போது இமைக்குள் சொருகிக் கொள்கின்றன. அருமையான கதையின் கருவை, கருகலைப்பு செய்திருக்கிறது வேகமெடுத்த திரைக்கதை. கவனமும் பொறுமையும் இயக்குநருக்கு தேவை. கடிவாளம் இல்லாத குதிரையில் சவாரி செய்திருக்கிறார் இயக்குநர் செல்லக்குட்டி. திரைவானில் சிட்டுக்குருவி பறக்கிற தூரத்தில் பறந்த படம் “சாரா”.

