‘ 29 ‘படத்தின் பதாகை வெளியீடு

நடிகர் விது கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ’29’ என பெயரிடப்பட்டு, அதற்கான பதாகை மற்றும் விளம்பர காணொளி வெளியீடு நடைபெற்றது. இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’29’  திரைப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் கவனிக்க பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் எஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.*******

இயக்குநர் ரத்ன குமார் பேசுகையில், ”  29 வயதிலிருந்து 30 ஆவது வயதை தொட்டால் ஜாதகம் ரிஜெக்ட் ஆகும் . அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆகும். இப்போதெல்லாம் இளைஞர்கள் படம் பண்ண வந்து விட்டார்கள் என்று சொல்லி ஸ்கிரிப்டுகள் ரிஜெக்ட் ஆகும். நான் ‘மது’ எனும் பெயரில் குறும்பட ஒன்றை இயக்கினேன். அந்த கதையை தான் ‘ மேயாதமான்’ எனும் திரைப்படமாக ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. என்னை இயக்குநராகவும் அறிமுகப்படுத்தியது. சமூக வலைதளங்களில் என்னுடைய புகைப்படத்தை பதிவிட்ட போது சிலர் என்னை மதன் கௌரி என கருதினர். திரையுலகில் எழுத்தாளராக கதாசிரியராக பணியாற்றிய போது சந்திக்கும் நபர்கள் என்னிடம் விஜய் சேதுபதி பற்றியும், கார்த்திக் சுப்புராஜ் பற்றியும், லோகேஷ் கனகராஜ் பற்றியும் தான் விசாரிப்பார்கள். அப்போது எனக்குள் நான் யார்? என்ற கேள்வி எழுந்தது. என்னுடைய 29 வது வயதில் லோகேஷ் எனும் நண்பன் கிடைத்தான். இந்தப் படத்திற்கு ஏன் 29 என பெயரிட்டேன் என்றால் அந்த வயது தான் முக்கியமானது.‌ என்னுடைய வாழ்க்கையில் எனக்கு அந்த வயதில்தான் பகிர்ந்து கொள்ள இயலாத எதிர்மறை எண்ணம் ஏற்பட்டது.‌ அந்தத் தருணத்தில் படத்தொகுப்பாளர் சதீஷ்குமார் தான் ‘உங்களை நீங்கள் உள்ளுக்குள் தேடுங்கள் அல்லது புறத்தில் தேடுங்கள்’ என்று சொல்லி, சபரிமலைக்கு மாலை போட்டு யாத்திரை சென்று வாருங்கள் என அறிவுறுத்தினார். என்னைப் பொறுத்தவரை உடல் தான் கடவுள். மனசு தான் தெய்வம் என்ற கொள்கை உடையவன்.‌ சபரிமலை யாத்திரை செல்லும்போது வாழ்க்கை ஏற்றம் இறக்கங்களைக் கொண்டது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். ‘மேயாத மான்’ படத்தில் பணியாற்றியவர்களுடன் மீண்டும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறேன். மேயாத மான் ரொமான்டிக் காமெடி படம் என்றால் .. இந்த’ 29′ படமும் வித்தியாசமான கேரக்டருடன் கூடிய ரொமாண்டிக் படம் தான்.

என் நண்பன் லோகேஷ் கனகராஜ் தற்போது அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக குற்றாலத்தில் முகாமிட்டிருக்கிறார். அதனால் இதில் கலந்து கொள்ள முடியவில்லை. அவருடைய நண்பரான பிரதீப் இங்கு வருகை தந்திருக்கிறார். நடிகை ப்ரீத்தி அஸ்ரானியிடம் இப்படத்தின் கதையை சொன்னேன். முழுவதுமாக கேட்டுவிட்டு எனக்கு சில இடங்களில் நெருடல் இருக்கிறது. அதில் நடிப்பதற்கு மனம் ஒப்பவில்லை என்றார். அவரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்துவதற்காக விளக்கம் அளித்தேன். ஆனாலும் அவருடைய முடிவில் அவர் உறுதியாக இருந்தார். அதுதான் இந்த கதையை ஒரு பெண்ணால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால்.. நாம் ஏன் வற்புறுத்த வேண்டும் என நினைத்தேன்.  அவர்கள் மறுத்ததால் திரைக்கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினேன். அதன் பிறகு படத்தின் தோற்றமே மாறிவிட்டது. இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் நாயகனான விது ஒரு வளர்ந்த குழந்தை. அவர் ‘ஜிகர்தண்டா 2’ படத்தில் நடித்திருக்கிறார். ‘ ரெட்ரோ’ படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படத்திலும் அவருடைய முகம் தெளிவாக இருக்காது. இந்த படத்தில் தான் அவருடைய முழு உருவத்தையும் ஸ்டைலாக காட்சிப்படுத்தி இருக்கிறோம். நாம் அன்றாடம் பார்க்கும் பக்கத்து வீட்டு பையனின் கதை தான் இது. ஆனால் மற்றவர்கள் பார்க்க இயலாத கோணத்தில் உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படம் தனுஷ் நடித்த விஐபி படம் போல் இருக்க வேண்டும் என்று நினைத்து எழுதி இருக்கிறேன் ”என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ” ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் ‘மேயாத மான்’ முதல் படம். அதைத்தொடர்ந்து இதுவரை 17 படங்களை தயாரித்திருக்கிறோம். இருந்தாலும் எங்களுடைய மேயாத மான் முதல் படம் என்பதாலும், அதனை தயாரிக்கும் போது எங்களுக்கு கிடைத்த அனுபவம் பொக்கிஷமானது. அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் எங்கள் நிறுவனத்திற்கு எப்போதும் சிறப்பானவர்தான்.  ரத்ன குமார் சிறந்த எழுத்தாளர்- கதாசிரியர்- இயக்குநர். அவர் பேசும் பல விசயங்களில் எனக்கு முரண்பாடு இருந்தாலும்.. அவருடன் சகோதர உறவு உண்டு. இந்தப் படத்தின் கதையை மேயாத மான் படத்தை முடித்த பிறகு எங்களிடம் சொன்னார். இந்தக் கதையை நடிகர் தனுஷிடம் சொன்னோம். அவரும் கேட்டு மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனால் இந்தக் கதையில் என்னால் நடிக்க முடியாது. நான் இப்போது ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வருகிறேன் . வேறு யாராவது இளம் வயதினர் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார். இந்தக் கதை தனுஷிடம் சொல்லப்பட்டதால் இதனை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால் நடிப்புத் திறன் கொண்ட நடிகரும், நடிகையும் இருந்தால்தான் பொருத்தமானதாக இருக்கும் என்றேன். இதற்காகவே சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது. இந்த நிலையில் சமீபத்தில் ரத்னகுமார் விதுவை ஆடிஷன் செய்து அவரை தேர்ந்தெடுத்தார். டபுள் எக்ஸ் படத்திற்கு முன் விது தான் ஹீரோ என்றால் நான் ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். ஆனால் ‘ஜிகர்தண்டா 2’,  ‘ ரெட்ரோ ‘ படத்தில் நடித்ததற்கு பிறகு தன்னை நடிகனாக வெளிப்படுத்துவதற்கு கடினமாக உழைத்து தகுதிப்படுத்திக்கொண்டான். அவனது ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் பார்த்துதான் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு சரி என்று ஒப்புக்கொண்டேன். ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அந்த கதாபாத்திரத்தை பற்றி சிந்திக்க வேண்டும். அதற்கான உடல் மொழியை வெளிப்படுத்துவதற்காக முயற்சிக்க வேண்டும்.. என்பதெல்லாம் அவருக்கு  தெரிந்திருந்தது. இதனை நான் ‘ரெட்ரோ ‘ படத்தில் நடிக்கும் போது அவரிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தை தெரிந்து கொண்டேன். இந்தப் படத்தில் விதுவும், ப்ரீத்தி அஸ்ரானியும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் தொடர்பான 20 நிமிட காட்சியை பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருப்பதில் பெருமிதம் அடைகிறேன்” என்றார்.

இதனிடையே இந்த விழாவில் இடம்பெற்ற ’29’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவிர்த்து, கைகளால் வரைந்து நேர்த்தியாக உருவாக்கப்பட்டது என்பதும், இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தங்களுடைய 29 வது வயதில் நடைபெற்ற சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் என்பதும்  கவனிக்கத்தக்கது.