கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் பாலாஜி இயக்கத்தில், சித்து, தர்ஷிகா, ரித்விகா, பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “தி டார்க் ஹெவன்”. சென்னையில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. இந்த கொலைகளை விசாரிக்க ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி நியமிக்கப்படுகிறார். வழக்கமான கொலை வழக்காக நகரும் இந்த விசாரணை, அடுத்தடுத்த கட்டங்களில் யாரும் எதிர்பாராத பல திருப்பங்களை நோக்கி பயணிக்கிறது. குற்றவாளி யார் என்பதை கண்டறியும் முயற்சியில், அந்த அதிகாரியின் சொந்த வாழ்க்கையும் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, இறுதியில் அந்த மர்மங்களை அவர் எவ்வாறு அவிழ்க்கிறார் என்பதே ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
தி டார்க் ஹெவன் படத்தின் முதல் பாதியை மிகவும் நேர்த்தியாகவும், கதையோடு ஒட்டியும் கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் பாலாஜி. ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை பார்வையாளர்களிடம் தூண்டுவதில் திரைக்கதை வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, இரண்டாம் பாதியில் வரும் சில மர்ம முடிச்சுகள் மற்றும் படத்தின் திரைக்கதை ஓட்டம் பெரும் பலமாக அமைந்துள்ளது. தேவையற்ற காதல் காட்சிகளோ அல்லது திணிக்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களோ இல்லாமல், முழுக்க முழுக்க கதையின் போக்கிலேயே படம் பயணிப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சித்து, ஒரு மிடுக்கான போலீஸ் அதிகாரியாக பாரி கதாபாத்திரத்தில் மிகச் சிறந்த உழைப்பை வழங்கியுள்ளார். கதாபாத்திரத்தின் தீவிர தன்மையை உணர்ந்து அவரது உடல்மொழியும், வசன உச்சரிப்பும் கச்சிதமாக அமைந்துள்ளன. பிக் பாஸ் தர்ஷிகா உமையாள் கதாபாத்திரத்திலும், பிக் பாஸ் ரித்விகா கனியாகவும் வாழ்ந்துள்ளனர். சக்தி பாலாஜியின் பின்னணி இசையும், மணிகண்டன் பிகேவின் ஒளிப்பதிவும் படத்தில் அச்சமூட்டும் உணர்வை சிறப்பாக கடத்துகின்றன. குறிப்பாக, இரவு நேரக் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் உழைப்பும், இருண்ட உலகத்தை காட்டும் வண்ண அமைப்பும் பாராட்டத்தக்கது. மர்மமான சூழ்நிலையை உருவாக்குவதில் பின்னணி இசை முக்கிய பங்கு வகிக்கிறது. படத்தின் மிகப்பெரிய பலமே அதன் யாரும் எளிதில் கணித்திட முடியாத உச்சக்கட்ட காட்சிதான். படம் முடியும் வரை குற்றவாளி இவராகத்தான் இருக்கும் என்று பார்வையாளர்களை கணிக்க வைத்து, இறுதியில் எதிர்பாராத ஒரு திருப்பத்தை இயக்குநர் வைத்துள்ளார். ஆனாலும், படத்தின் சில இடங்கள் ஆமை வேகத்தில் ரொம்பவே மெதுவாக நகர்வது படத்தின் சுவாரஸ்யத்திற்கு வேகத்தடையாக உள்ளன. சில சினிமாத்தனத்தை தவிர்த்துப் பார்த்தால், அச்சமூட்டப்படுவதை விரும்பும் பார்வையாளர்கள் இப்படத்தை கொண்டாடுவார்கள்.

