உரிய நடவடிக்கையால் 2025ம் ஆண்டு ரவுடி கொலை நிகழ்வுகள், வழிப்பறி, பாரி குற்றங்கள், செல்போன் பறிப்பு, வாகன திருட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 1,092 தொடர் குற்றம் புரிந்தவர்கள் மீது குண்டர் தடுப்புக்காவல் சட்டப்படி நடவடிக்கை. 66 போக்சோ வழக்குகளில் எதிரிகளுக்கு கடும் தண்டனை பெறப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவினரின் அதி தீவிர நடவடிக்கை மூலம் 778 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் தலைநகரும், இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றான சென்னை பெருநகர் ஒரு கோடிக்கும் மேலாக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். சென்னை பெருநகர 12 காவல் மாவட்டங்கள் உள்ளடக்கிய பகுதிகளில் குற்றங்கள் நடவாவண்ணம் கண்காணித்து, உரிய காவல் துறை நடைமுறைகளை செயல்படுத்தி குற்றங்களை குறைப்பதற்கும் உரிய நடவடிக்கையுடன் நீதிமன்ற தண்டனை பெற்று தந்திடவும், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, மகளிர் காவல் துறையினர், போக்குவரத்து காவல் துறையினரின் முறையான ரோந்து பணி மற்றும் தொடர் கண்காணிப்பு மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்.
2023ம் ஆண்டு 105 கொலை நிகழ்வுகளும் 2024ம் ஆண்டு 105 கொலை நிகழ்வுகளும் நடந்துள்ளன. 2025ம் ஆண்டு, 93 கொலை நிகழ்வு வழக்குகள் மட்டுமே தாக்கலாகியுள்ளது. இவை அற்ப சச்சரவுகள், திடீர் உணர்ச்சி வசப்படுதல், தவறான உறவு, பணம் ஏமாற்றியது, இடப்பிரச்சனை, மதுபோதையில் சண்டை போன்ற காரணங்களால் மட்டுமே நடந்துள்ளன. புதிதாக துவங்கப்பட்ட OCU பிரிவின் ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக ரவுடி கொலைகள் நடவாமல் தடுக்கப்பட்டுள்ளது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு குற்ற நிகழ்வுகளின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டு சென்னை பெருநகர காவலின் திறமையான நடவடிக்கையின் காரணமாக பதிவான வழிப்பறி, திருட்டு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் மற்றும் வாகன திருட்டுகள் வெகுவாகக் குறைந்துள்ளன.
2023ம் ஆண்டில் 325 வழிப்பறி வழக்குகளும், 2024ம் ஆண்டில் 256 வழிப்பறி வழக்குகளும் தாக்கலாகியிருந்த நிலையில், 2025ம் ஆண்டில் தகுந்த குற்றத் தடுப்பு நடவடிக்கையினால், 180 வழிப்பறி வழக்குகள் மட்டுமே தாக்கலாகியுள்ளது.
2023ம் ஆண்டில் 424 செயின் மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளும், 2024 ம் ஆண்டில் 310 செயின் மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளும் தாக்கலாகியுள்ளன. காவல்துறையினரின் தீவிர ரோந்து, வாகன தணிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் காரணமாக 2025 ம் ஆண்டில் 206 வழக்குகளாக பெருமளவில் குறைந்துள்ளது. 2023ம் ஆண்டில் 1,750 வாகன திருட்டு வழக்குகளும், 2024ம் ஆண்டில் பதிவான வாகன திருட்டு வழக்குகளின் எண்ணிக்கை 1,486 ஆக இருந்தது. 2025ம்ஆண்டு காவல் துறை உத்திகள் மற்றும் பிரத்யேக தொழில்முறை நடவடிக்கைகளால் 2025 ஆம் ஆண்டில் இது 1,092 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சீரிய வாகனத் தணிக்கைகள், தகுந்த காவல் பணி செயலிகள் பயன்பாடு மூலம் சிறந்த வகையில் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன
–தங்க முகையதீன்-

