அருண் ரங்கராஜுலு தயாரிப்பில், ராம் சக்கரி இயக்கத்தில், சமுத்திரக்கனி, லட்சுமிபிரியா சந்திரமௌலி, கரண் சக்ரவர்த்தி, கௌதம் வாசுதேவ் மேனன், அபிநயா, படவா கோபி, கார்திக்குமார், கோதண்டம், மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா ஹரகோட், ஜெயந்தி, பேபி கே லயா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கார்மேனி செல்வம்”. துபாயில் சமுத்திரக்கனி இரண்டு வருட ஒப்பந்தத்தில் கார் ஓட்டுநராக ஒரு குழுமத்தில் நல்ல ஊதியத்தில் வேலை பார்க்கிறார். ஆனாலும் 6 மாதத்துக்கு மேல் அவரால் துபாயில் இருக்க முடியவில்லை. ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று அக்குழுமத்தின் மேலாளரிடம் கெஞ்சுகிறார். ஆனால் ஒப்பந்தபடி இரண்டு வருடங்கள் துபாயில்தான் வேலை பார்க்க வேண்டும் என்று மேலாளர் கண்டிப்புடன் சொல்லிவிடுகிறார். சமுத்திரக்கனி ஏன் ஊருக்கு திரும்பிவர துடியாய் துடிக்கிறார் என்பதை அவரின் கடந்தகால நினைவுகளோடு சொல்வதுதான் இப்படத்தின் கதை. துபாயில் இருக்கும்போது சோகத்தின் மொத்த உருவமாக தென்படும் சமுத்திரக்கனி, சென்னையில் வாசுதேவ மேனனிடம் கார் ஓட்டுநராக வேலை பார்க்கும்பொது தெளிவான முகத்துடன் சந்தோஷத்தின் எல்லையை தொட்டுவிட்ட நிம்மதியை தன் முகத்தில் படரவிட்டிருக்கிறார். க்டற்கரைக் குப்பத்தில் வாடகை வீட்டில் குடியிருக்கும் சமுத்திரக்கனியும் அவரது மனைவி லட்சுமிபிரியாவும் தன்மகனோடு வாழ்கின்ற எளிமையான வாழ்க்கையின்போதும், பணக்காரனாக வாழ கடன்வாங்கி மைத்துனரிடம் அவமானப்படும் காட்சியிலும் சமுத்திரக்கனியின் நடிப்பு உச்சத்தை தொட்டிருக்கிறது. அவரின் நடிப்புக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் மனைவியாக நடித்திருக்கும் லட்சுமிபிரியா. சமுத்திரக்கனி லட்சுமி ப்ரியாவின் நடிப்பு அவர்களை ஒரு தம்பதியாகவே நம்மை நம்ப வைக்கிறது. அவர்களது மகனாக நடித்திருக்கும் சிறுவன் கரண் சக்கரவர்த்தியும் கவனிக்க வைக்கிறான். கனி அப்பாவித்தனமாக செயல்பட்ட போதெல்லாம் அவரை அறிவாளி எனவும், அறிவார்ந்து பணத்தை சேர்த்துக் கொண்டு வந்த போது அவரை “உனக்கு அறிவே இல்லப்பா..!” என்றும் அவன் அழைப்பதை ரசிக்கலாம். இப்படி ஒரு முதலாளியும் முதலாளி அம்மாவும் அமைய மாட்டார்களா என்று நம்மை ஏங்க வைத்து விடுகிறார்கள் கௌதம் மேனனும் அவரது மனைவியாக வரும் அபிநயாவும். வாழ்க்கையில் பிரச்சனைகளை எப்படி எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக வரும் கௌதம் மேனனின் பாத்திரப்படைப்பு அற்புதம்.அதேபோல் கொஞ்ச நேரமே வந்தாலும் படம் முடியும்போது நெஞ்சில் நிறைகிறார் அபிநயா. அவ்வப்போது சர்ப்ரைஸ் கொடுக்கும் அவர் கடைசியில் கொடுக்கும் சர்ப்ரைஸ் வேற லெவல். அவர்களது செல்லக் குழந்தையும் க்யூட். சமுத்திரகனியின் அப்பாவி மனதை பாவி மனதாக மாற்றுவதில் ஒரு காட்சிதான் ஆனாலும் கார்த்திக் குமாரும், படவா கோபியும் முக்கிய பங்காற்றுகிறார்கள்.
“கார்மேனி செல்வம்” திரைப்பட விமர்சனம்
