“நாகபந்தம்” திரைப்படம் ஜூலை 3ல் வெளியீடு

புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் அதிர்வூட்டும் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள திரைப்படம் “நாகபந்தம்”. அபிஷேக் நாமா இயக்கத்தில், விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ளது. வரும் ஜூலை 3 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. நடிகர் விராட் கர்ணா பேசியதாவது: “இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆன்மிகம் மற்றும் பக்தி சார்ந்த விஷயங்களில் அதிகமாக ஈடுபட ஊக்குவித்து வருகிறார்கள். ஏனெனில் அது மனதிற்கும் உடலுக்கும் அமைதியையும் சக்தியையும் அளிக்கிறது. ‘நாகபந்தம்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவமும் எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை முடித்த பிறகு நான் ஆன்மிக ரீதியாகவும், மனதளவிலும் மிகவும் வலிமையாக உணர்கிறேன்.*******

இந்தப் படம் இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், தைரியம், கோவில்களின் மரபு மற்றும் நமது தொன்மையான நாகரீகத்தின் பல அம்சங்களை பேசுகிறது. நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்தப் படம் இருக்கும். நாகபந்தம்’ திரைப்படத்தில் நான் ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு அறிமுக நடிகராக இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கதாபாத்திரத்திற்காக நான் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளேன். டிரெய்லருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

வரும் ஜூலை 3 ஆம் தேதி திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. டிரெய்லருக்கு நீங்கள் கொடுத்த அதே அன்பையும் ஆதரவையும் படத்திற்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன். நான் கொஞ்சம் பதட்டமாக இருப்பதால் ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். சென்னை மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.