10 ஆண்டுகளில் முன்னணி நடிகராக ஆவேன் – நடிகர் கே.ஜெ.ஆர்.

முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா  நடைபெற்றது. இவ்விழாவில்  தயாரிப்பாளர் நடிகர் கே ஜெ ஆர் பேசியதாவது:  “ஒரு நடிகராக இந்த வரவேற்பு எனக்கு 100 சதவீதம் அல்ல, 1000 சதவீதம் மகிழ்ச்சியை அளிக்கிறது. மக்கள் வரவேற்பு தர ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கு முழு காரணம் என இயக்குநர் தென்பாதியான் தான் அவர் சொன்னதை நான் செய்தேன். தொழில்நுட்பக் குழு அத்தனை பேரும் மிகச்சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். இந்தப்படம் ஜெயித்தால் தான் இவர்களுக்கு வாழ்க்கை அதனால் இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள். இன்னும் 10 வருடத்தில் நான் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகனாக ஜெயிப்பேன் நான் இந்த தயாரிப்பாளர்களை ஜெயிக்க வைப்பேன். கைவிட மாட்டேன். இந்தப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் எனக்காக காசு பணம் பார்க்காமல் வேலை செய்தார்கள். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், ஜிப்ரான் உட்பட அனைவருக்கும் நன்றி உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி.” ********

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பா.ரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு தடகள வீரனின் வாழ்க்கைப் பயணத்தையும், நீதிக்காக அவர் மேற்கொள்ளும் சட்டப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பையும், ராமு தங்கராஜ் கலை இயக்கத்தையும், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பையும், ஷெரீப் நடன அமைப்பையும் கவனித்துள்ளனர்.