“லட்சுமிகாந்தன் கொலை வழக்கு” திரைப்பட விமர்சனம்

தங்க முகையதீன்

———-

கே.வி. ஷபரீஷ் தயாரிப்பில் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “லட்சுமிகாந்தன் கொலை வழக்கு”. அருவி மதன் கொலை குற்றவாளியாக  நீதிபதி கன்யா பாரதி முன் நிறுத்தப்படுகிறார். அருவி மதனும் கொலை செய்ததாக ஒப்புக்கொள்கிறார். ஆனால் நீதிபதி கன்யா பாரதி அதை நம்பவில்லை. இருந்தாலும் தீர்ப்பு நாளைக்கு வழங்கப்படும் என்று கூறிவிடுகிறார். அன்று இரவு முழுவதும் நீதிபதியால் தூங்க முடியவில்லை. அப்போது கடலூரில் 1972 ஆம் ஆண்டில் தனது சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தை நினைத்து பார்க்கிறார் நீதிபதி கன்யா பாரதி. அதிலிருந்து கதை தொடங்குகிறது. 1972 ஆம் ஆண்டில் அறிவுமதி (வெற்றி) கொலைக் குற்றவாளியாக நீதிபதி முன் நிறுத்தப்பட்டிருக்கிறார். நீதிபதியின்  எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறார். ஆனால் கொலைக் குற்றத்தை மட்டும் ஒப்புக்கொண்டு தனக்கு தண்டனையை வழங்கிவிடுங்கள் என்று கூறுகிறார். இந்த வழக்கிற்கும் 2022 ஆம் ஆண்டு நீதிபதி கன்யா பாரதி விசாரிக்கும் வழக்கிற்கும் என்ன தொடர்பு? நீதிபதி கன்யா பாரதி,  அருவி மதனுக்கு தூக்குத் தண்டணை விதித்தாரா இல்லையா?. 1972 ல் குற்றவாளி கூண்டிக் நிற்கும் அறிவுமதி (வெற்றி) ஏன் நீதிபதியின் முன் மௌனம் சாதிக்கிறார்? என்பதுதான் கதை.

புதிய சிந்தனையை படம் பார்ப்போர் மனதில் பதிய வைக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன். கதையின் நாயகன் வெற்றி என்பதைவிட,  உரையாடல்தான் கதையின் நாயகன். அற்பதமான வசனங்கள். சிந்திக்க வைக்கும் உரையாடல்களை தந்து கதையை உயிரோட்டமாக செதுக்கியிருக்கிறார் தயாள் பத்மநாபன். வெற்றியின் நடிப்பு மெச்சத்தகந்தது. உச்சக்கட்ட காட்சியில் அம்மாவை கட்டிப்பிடித்து அழும் காட்சியில் படம் பார்ப்பவர்களின் கண்களையும்  ஈரப்பதமாக்கி விடுகிறார் வெற்றி. சிறை அதிகாரியாக நடித்திருக்கும் பாண்டேயின் உதடுகள் அதிகாரத் தோரணையில் அசைந்தாலும் உள்ளம் மனிதாபிமானத்துடன் உருகுவதை தத்ரூபமாக காட்டி நடிப்பில் முதிர்ச்சி பெற்றிருக்கிறார். பிரிகிடாவும் மாறனும் தங்களின் கதாபாத்திரத்தை உள்வாங்கி அருமையான நடிப்பை தந்துள்ளார்கள். பாடல்கள் அனைத்தும்  காதுக்கும் மனதுக்கும் இலகுவாக இசைந்திருக்கிறது. மெட்டுக்கு பாட்டு எழுதாமல் பாட்டுக்கு மெட்டு போட்டிருப்பார்கள் போலிருக்கிறது. அதாவது பாக்கெட் மசாலாவில் குழம்பு வைக்காமல் அம்மியில் அரைத்த மசாலாவில் குழம்பு வைத்த

ருசிபோல் பாடல்கள் ருசிக்கிறது. கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்பதை இறுதியாக நாட்டின் ஜனாதிபதியிடம் கேட்பதைவிட, அக்கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் கேட்டால் மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும், நீதிபதி கொடுக்கும் தீர்ப்பால் பாதிக்கபட்டவர்கள் திருப்தியடைய வேண்டும். அதுதான் சரியான நீதி. அதைத்தான் அருவி மதன் வழக்கில் நீதிபதி கன்யா வழங்குகிறார்.