“லவ் ஓ லவ்” திரைப்பட விமர்சனம்

தினேஷ்ராஜ், தனஞ்செயன் ஆகியோரின் தயாரிப்பில், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவீஷ், நாக துர்கா, செல்வராகவன், வனிதா விஜயகுமார், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “லவ் ஓ லவ்”.  பவீஷும் நாக துர்காவும் இணைபிரியாத காதலர்கள்.   இருவரும் ஒரே அலுவலகத்தில்தான் வேலை செய்கிறார்கள். காதலி நாகதுர்காவின்  விருப்பத்திற்கு இணங்க காலையில் அருந்தும் காபிக்கும் மதிய உணவுக்கும் இரவு விருந்துக்கும் நட்சத்திர விடுதிகளில் காதலிக்காக செலவு செய்கிறார் பவிஷ். அத்துடன் தங்க நகைகளையும் பரிசளிக்கிறார். அதனால் தன் சம்பள பணம் முழுவதும் காலியாகிறது. உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கடன் வாங்குகிறார். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்கிறார்கள். அப்போது கடன் கொடுத்தவர்கள் பவிஷுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். இதனால் திருமணம் தடைபடுகிறது. காதலன் பவிஷ் வாங்கிய கடனை நானே அடைத்துவிடுகிறேன் என்று கடன் கொடுத்தவர்களிடம் நாகதுர்கா சொல்கிறார். ஆனால் அந்த சமயத்தில் நாகதுர்காவின் வேலையும் பறிபோய்விடுகிறது. அந்த கடனை அவர் அடைத்தாரா? இல்லையா? இருவருக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

இப்படம் முழுக்க ஒரு பொழுதுபோக்கு படமாகவே இயக்குநர் படமெடுத்துள்ளார். ஆண்னானாலும் பெண்ணானாலும் ஆடம்பர செலவுகள் செய்யக்கூடாதென்பதற்கான திரைக்கதைதான் இப்படத்த்கின் மையக் கருத்து. காதலனின் விருப்பத்திற்காக மதுபானக் கடையில் மதுவாங்கும் நாகதுர்காவின் காட்சியை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். பவிஷும் நாகதுர்காவும் கதைக்கு ஏற்ற ஜோடிகள். தனது பங்களிப்பை குறை வின்றி நிறைவாக செய்து முடித்துள்ளார்கள். படத்துக்கு பக்க பலமாக தோள் கொடுத்து தூக்கி நிற்பது இசைதான். தோள் கொடுத்த அந்த தோழர்ஃபாக்‌ஷந் பாராட்டுதலுக்குரியவர். ஆழமில்லாத கதை. மேலோட்டமாக செல்கிறது. துடுப்பில்லாமல் தோணியை ஓட்டிச் சென்றிருக்கிறார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன். இருந்தாலும் இளைஞர்களின் மனநிலையை அலசி எடுத்திருக்கிறார். காதலர்களுக்கு இப்படம் ஒரு பாடம்.