“இதயம் முரளி” திரைப்பட விமர்சனம்”

அதர்வா திருச்சியில் படிக்கும்போது ப்ரீத்தி முகுந்தனை காதலிக்கிறார். பயிற்சி வகுப்பு, பூப்பந்தாட்டம் நடக்கும் இடமென  ப்ரீத்தி முகுந்தனின் பின்னாடியே சுற்றுகிறார் அதர்வா. ப்ரீத்தியிடம் எப்படியாவது காதலை சொல்ல நினைத்து, சாமின் பிறந்தநாள் விருந்தோம்பலில்  சொல்ல முயல்கிறார். அங்கு அவர் யாரும்  எதிர்பாராத விதமாக காதலை சொல்லாமல் போகிறார். பிறகு, கல்லூரி காலத்தில் சென்னையில் கயாடு லோகரை சந்திக்கிறார். அவரையும் அதர்வா காதலிக்கிறார். அவரிடமும் தன் காதலை சொல்ல முயற்சிக்கும்போது எதிர்பாராத விதமாக சொல்லாமல் போய்விடுகிறார். கடைசியில் தன் காதலை அதர்வா யாரிடம் சொன்னார்? அவரது காதலை யார் ஏற்றார்கள்? என்பதுதான் மீதிக்கதை.

அதர்வா மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. பள்ளி பருவ பையன், கல்லூரி பருவ இளைஞர் என இரண்டு தோற்றங்களிலும் தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் அதர்வா.

ப்ரீத்தி முகுந்தன் அழகிலும், நடிப்பிலும், நடனத்திலும் சதம் அடித்துவிட்டார்.  கயாடு லோஹருக்கு அதிக வாய்ப்பு இல்லை. சில காட்சிகளிலே தோன்றினாலும் பெவையாளர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார். சின்னி ஜெயந்த், தமன்,  காதலியாக வரும் நிகாரிகா, ஆசிரியையாக  வரும் ஜொனிட்டா மனதில் நிற்கிறார்கள். தமன், பரிதாபங்கள் சுதாகர், ரக்‌ஷன், டிராவிட் வரும் காட்சிகள் கலகலப்பாக உள்ளது.  பள்ளிப் பருவ நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம் என அனைத்தும் கலந்த இளைஞர்களுக்கான  கதையை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன். அதர்வா, அப்பா முரளி பாணியில் இரண்டு காதலையும் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகள் முரளியை நினைவுப்படுத்துகிறது.

இதயா பாடல், இடைவேளையின் போது வரும் “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா” பாடல் உள்ளிட்டவை படத்துக்கு பலமாக அமைந்துள்ளது. காதல செல்லும் படத்துக்கு சண்டைக்காட்சிகள் ஏன் என்று தெரியவில்லை. மனதுக்கு தெம்பூட்டும் காதலை நகைச்சுவை உணர்வோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன். தமனின் பின்னணி இசை தாளம்போட வைக்கிறது. ஒளிப்பதிவு வெள்ளித் திரையில்மட்டும் பதியவில்லை. பார்வையாளர்களின் மனத்திரையிலும் பதிகிறது.