டெல்லி ஜந்தர் மந்தரில், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் ஜனநாயக வழியில் நடத்திய போராட்டம் குறித்து, “நான் அங்கே இருந்திருந்தால் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருப்பேன்” என்று வெளிப்படையாகக் கூறியுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடையவரும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் அறிவுசார் பிரிவின் தலைவருமான டி.ஜி. மோகன்தாசின் பேச்சு, ஒரு தனிநபரின் கருத்தல்ல. எதிர்ப்புக் குரல்களை இரத்தத்தில் மூழ்கடிக்க துடிக்கும் பாசிச அரசியலின் இரத்த வெறி பிடித்த உண்மை முகமாகும். இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
போராட்டங்களில் பங்கேற்கும் பெண்களை பாலியல் வன்முறையுடன் தொடர்புபடுத்தி, அவர்கள் அதனை விரும்புவதாகவும், அத்தகைய கொடூரச் சம்பவங்களில் உயிரிழப்பவர்களை பின்னர் தியாகிகளாக மாற்றிவிடுவார்கள் என்றும் கூறியிருப்பது, பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் அருவருப்பான மனநிலையின் வெளிப்பாடு மட்டுமல்ல. பெண்களின் பாதுகாப்பையும், ஜனநாயகப் போராட்டங்களையும் கேலிக்கூத்தாக்கும் ஆணவத்தின் உச்சக்கட்டமாகும்.
இத்தகைய விஷமக் கருத்துகள் மனித நேயத்திற்கும், சமூக நாகரிகத்திற்கும் எதிரானவை.
அரசியல் கருத்து வேறுபாட்டை எதிர்கொள்ள ஜனநாயக விவாதத்தைக் கூட ஏற்க முடியாமல், துப்பாக்கி மொழியால் பதிலளிக்க வேண்டும் என்று சொல்வது, சர்வாதிகார மனப்போக்கின் வெளிப்பாடாகும். எதிர்ப்பை ஒடுக்க வன்முறையையே தீர்வாகக் கருதும் இந்த அணுகுமுறை, அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்களுக்கே வெளிப்படையான சவாலாகும்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து, வெறுப்பையும் வன்முறையையும் மதவெறியையும் தூண்டும் வகையில் கருத்துகளைப் பரப்பிய டி.ஜ. மோகன்தாசு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அதோடு நிற்காமல், அந்த வழக்கை விரைந்து விசாரித்து, சட்டத்தின் முழுக் கடுமையையும் பயன்படுத்தி அவருக்குத் தகுந்த தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.
ஜனநாயகப் போராட்டங்களுக்கு எதிராக துப்பாக்கியை உயர்த்திப் பேசுவதும், பெண்களை இழிவுபடுத்தி சமூகத்தில் வன்முறை மனநிலையை தூண்டுவதும் கருத்துச் சுதந்திரம் அல்ல. அவை சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டிய குற்றங்கள். இத்தகைய ஆணவக் குரல்கள் தண்டனையின்றி விடப்பட்டால், அது மக்களாட்சியின் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்களுக்கு ஊக்கமளிக்கும்.
எனவே, ஒன்றிய அரசும் சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகளும் எந்தவித தாமதமும் இன்றி டி.ஜி. மோகன்தாசு மீது கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து, சட்டமே மேலானது என்பதை நாட்டிற்கு உணர்த்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

