குரு சோமசுந்தரம், அனுமோல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள காதல் திரைப்படமான ‘பாரிஸ் கஃபே’, வரும் செப்டம்பர் 18, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்த்கை எல்.வி.எண்டர்டெய்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் கண்மணி ரங்கநாதன் தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் சராஜ் சீலன் இயக்குநராக அறிமுகமாகிறார்.இப்படம், காதல், உறவுகள் மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப் பாதையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதை உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்கிறது. இப்படத்தில் விஜய் விஸ்வா, அர்ச்சனா குமார், சாய் விக்கி, நயனா சாய் மற்றும் பிபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.******
குரு சோமசுந்தரமும் அனுமோலும், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ்ந்து வரும் தம்பதியாக நடித்துள்ளனர். அழகான குடும்ப வாழ்க்கை எதிர்பாராத ஒரு திருப்பத்தால் பாதிக்கப்பட, அதன் பின்னர் அந்தக் குடும்பத்தில் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளன. சூழ்நிலைகளால் சோதிக்கப்படும் உறவுகள், கடினமான முடிவுகளால் சவாலுக்குள்ளாகும் காதல் மற்றும் மீண்டும் ஒன்றிணைவதற்காகப் போராடும் ஒரு குடும்பத்தின் உணர்வுப்பூர்வமான பயணத்தை டிரெய்லர் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.
படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு, பிரான்ஸின் பாரிஸ் நகரமும் கதையின் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது. பாரிஸின் அழகிய காட்சிகளை உணர்வுப்பூர்வமான கதை சொல்லலுடன் அழகாக இணைத்திருக்கிறது டிரெய்லர். காதல், குடும்ப உறவுகள் மற்றும் பாரிஸின் அழகிய பின்னணி ஆகியவற்றின் கலவையானது இப்படத்திற்கு தனித்துவமான காட்சியமைப்பையும் கதை சொல்லும் பாணியையும் வழங்குகிறது. இப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார். சதேஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். வி. ஜே. சபு ஜோசப் படத்தொகுப்பையும், தாமு MFA கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். வி. தன்ராஜ் ஆடை வடிவமைப்பை மேற்கொண்டுள்ள நிலையில், நடனத்தை பிரசாந்த் அமைத்துள்ளார்.

