இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் காணொளி வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வெளியிடப்பட்ட இசை மற்றும் முன்னோட்டக் காணொளிக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர். சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் இளம் தலைமுறையினரிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர். இவ்விழாவில் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், அவரது கணவர் மருத்துவர் சௌந்தரராஜன், இயக்குநர். மருத்துவர் ராஜா, தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன். ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.*++++++
இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா (M.D., USA) பேசியதாவது.., இந்த திரைப்படத்தின் கதையை அக்கா தமிழிசை மிக அழகாக கூறிவிட்டார். இப்படம் மருத்துவ துறையை பற்றிய படம் அதோடு இன்றைய இளம் தலைமுறையை அச்சுறுத்தும் போதைப்பொருள் பழக்கம், சுயமருந்து உட்கொள்ளுதல், போன்ற முக்கிய சமூகப் பிரச்சினைகளை இப்படம் பேசுகிறது. அதே நேரத்தில் பெற்றோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள் கடமையை பேசுகிறது. இப்படத்திற்காக அமெரிக்காவில் இருந்து பலமுறை வந்து பல கஷ்டங்களோடு இப்படத்தை உருவாக்கியுள்ளேன். இப்படத்தில் என் மனைவி மகள் பாடியுள்ளனர். பலர் இப்படத்திற்காக உழைத்துள்ளனர். தமிழ் சினிமாவில் பலர் நல்ல படைப்புகளுடன் வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு சரியான வாய்ப்புகளைத் தந்து அந்த தமிழ் சினிமாவில் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்பது மட்டும்தான் எங்களது ஆசை. இப்படத்தில் அண்ணன் ராஜா அவர்கள் மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவர் எனக்காக மட்டுமே இப்படத்தில் எந்த ஒரு சம்பளமும் வாங்காமல் நடித்துத் தந்தார். மிகச் சிறந்த உழைப்பைத் தந்திருக்கிறார். அவரைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். ஆச்சரியப்படுகிறேன். அவர் சிவாஜியைப் போல ஒரு அற்புதமான நடிப்பை இப்படத்தில் தந்திருக்கிறார். அவரை வைத்து தேவர் மகன் பார்ட் 2 எடுக்க வேண்டும் என்பது என் ஆசை. அது கண்டிப்பாக நிறைவேறும் இப்படத்தில் அவரது நடிப்பை அனைவரும் பாராட்டுவீர்கள். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
தயாரிப்பாளர் பேசியதாவது: “இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள தமிழக ஆளுநர், தமிழரசு சுந்தரராஜன் அவர்களுக்கும் ஹெச். ராஜா அவர்களுக்கும் மேடையில் அமர்ந்துள்ள சிறப்பு விருந்தினர்கள், நண்பர்கள், ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது. பல ஆண்டுகளாக இந்த இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே பயணித்து வருகின்றன. அதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. நான் தயாரித்த ஜிகர்தண்டா திரைப்படத்தை எடுத்துக்கொண்டால் மதுரையில் இருக்கும் ஒரு பிரபல ரவுடியை மையமாகக் கொண்ட கதை அது. ஆனால் இறுதியில் அந்த ரவுடி சினிமாவின் தாக்கத்தால் தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு நடிகராக மாறுகிறார். ஒரு மனிதனின் கெட்ட பழக்கங்களைக்கூட மாற்றும் சக்தி கலைக்கும் குறிப்பாக சினிமாவுக்கும் இருக்கிறது என்பதைத்தான் அந்தப் படம் எடுத்துக் காட்டியது. அதேபோல ஹெச். ராஜா அவர்களும் அரசியலில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். அவரது பேச்சுத் திறனும், செயல்பாடுகளும் அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று நம்புகிறேன். அதனால்தான் சினிமாவும் அரசியலும் தமிழகத்தில் எப்போதும் ஒன்றாகவே பயணிக்கின்றன என்று சொல்கிறேன். இந்தப் படத்தின் இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா அவர்கள் எம்.பி.பி.எஸ்., எம்.டி. படித்து உதவி பேராசிரியராக பணியாற்றியவர். பின்னர் அமெரிக்காவுக்குச் சென்று அங்கே மருத்துவராக உயர்ந்த நிலையில் இருந்தபோதும் சினிமா மீதான அவருடைய ஆர்வம் அவரை மீண்டும் இங்கே அழைத்து வந்து இந்தப் படத்தை இயக்க வைத்திருக்கிறது. அதுதான் சினிமாவின் ஈர்ப்பு.
ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின்றன. நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்களும், புதிய இயக்குநர்களும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து திரைப்படங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அதுதான் கலை உலகத்தின் மீதான அவர்களின் காதலையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. இந்தப் படத்தை இயக்கிய டாக்டர் எஸ். ராஜா அவர்களுக்கும், தயாரிப்பாளர் சுப்புலட்சுமி ஜெயராம் அவர்களுக்கும், படத்தொகுப்பாளர் ராஜா முகமது அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செய்! செய்யாதே!’ திரைப்படம் வெற்றி பெற்று மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி… அனைவருக்கும் நன்றி.”

