இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சத்யஜோதி பிலிம்ஸின் தயாரிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது. 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படத்திற்கான ரஜத் கமல் விருதை ‘கேப்டன் மில்லர்’ பெற்றுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் இந்த விருதை நேரில் பெற்றுக்கொண்டார்.*******
அதே திரைப்படத்திற்காக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷும், விழாவில் நேரில் கலந்துகொண்டு தனது Special Mention தேசிய அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார். இந்த இரட்டை தேசிய அங்கீகாரம், ‘கேப்டன் மில்லர்’ படக்குழுவிற்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல; பல தசாப்தங்களாக தரமான கதைகளையும், கலைநயம் மிக்க படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் சத்யஜோதி பிலிம்ஸின் நீண்ட திரைப்பயணத்திற்கு கிடைத்துள்ள மற்றுமொரு மகுடமாகவும் அமைந்துள்ளது. ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு திரைப்படத்தின் மீதான அர்ப்பணிப்பை கடத்தி வரும் சத்யஜோதி பிலிம்ஸ், தனது பாரம்பரியத்தில் மற்றுமொரு தேசிய விருதை தற்போது இணைத்துள்ளது.
1959-ல் வெளியான ‘கல்யாண பரிசு’ முதல் சத்யஜோதி பிலிம்ஸின் பயணம் தமிழ் சினிமாவின் பல முக்கியமான காலகட்டங்களுடன் இணைந்து பயணித்து வருகிறது. ‘கல்யாண பரிசு’ தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய அங்கீகாரத்தை பெற்றதுடன், ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படத்தின் மூலம் நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். தொடர்ந்து ‘மூன்றாம் பிறை’ திரைப்படம் மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்று, நடிகர் கமல்ஹாசனின் முதல் தேசிய விருதிற்கும் காரணமாக அமைந்தது.
இந்த சிறப்புமிக்க பாரம்பரியத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ், காலத்திற்கு ஏற்ற கதைகளையும், வெவ்வேறு களங்களில் உருவாகும் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறது. அந்த வரிசையில் ‘விஸ்வாசம்’ திரைப்படத்திற்கும் தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்த நிலையில், தற்போது ‘கேப்டன் மில்லர்’ மூலம் மீண்டும் தேசிய விருது மேடையில் சத்யஜோதி பிலிம்ஸின் பெயர் பெருமையுடன் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் பல தலைமுறைகளாக கட்டிக்காத்து வரும் அந்த நிறுவனத்தின் தேசிய அங்கீகாரப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல் இணைந்துள்ளது.

