“பெத்தலகேம் குடும்ப யூனிட்” திரைப்பட விமர்சனம்

திலீஷ் போத்தன், ஃபஹத் ஃபாசில், ஷ்யாம் புஷ்கரன் ஆகியோரின் தயாரிப்பில், கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில், நிவின் பாலி, மமிதா பைஜு, சங்கீத் பிரதாப், பிந்து பணிக்கர், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ஸ்ரிந்தா, ஷமீர் கான், மீனாட்சி ரவீந்திரன், அயசங்கர் கரிமுட்டம், தங்கம் மோகன், வெட்டுக்கிளி பிரகாஷ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பெத்தலகேம் குடும்ப யூனிட்” திரைபடம். தனது காதலி இறந்துபோனதால் திருமணமே வேண்டாம் என்று சொல்லி 42 வயதுவரை தனியாக வாழ்ந்து வருகிறார் நிவின் பாலி. அவர் வசிக்கும் வீட்டுக்கருகில் 22 வயதான மமிதா பைஜூ ஒரு வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் குடியேறுகிறார். 20 வயது வித்தியாசத்தையும் மீறி இருவரும் காதலிக்கிறார்கள். இதை அறிந்த மமிதா பைஜியின் பெற்றோர்கள் அவரை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்புகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு
தாயகம் திரும்பி வந்த மமிதா பைஜீ, தன்னைவிட வயது முதிர்ந்த நிவின் பாலியை திருமணம் செய்து கொண்டாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.நிவின் பாலி திரையில் தோன்றும் முதல் காட்சியிலிருந்தே தேவையான முதிர்ச்சியையும், அதேசமயத்தில் இயல்பான நக்கலையும் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார். 42 வயதை கடந்த நவீன் பாலி, வயது குறைவான மமிதா பைஜீயின் காதலை ஏற்க முடியாமல் தவிக்கும் தருணங்களிலும், தம்பியின் சிக்கல்களைப் பக்குவமாகக் கையாளும் இடங்களிலும் அவரது அனுபவமிக்க நடிப்பு மிளிர வைக்கிறது. மமிதா பைஜியின் துடிப்பான கல்லூரிப் பெண்ணின் மனவோட்டங்களை மிக இயல்பாகத் திரையில் பிரதிபலித்துள்ளார் மமிதா பைஜு. குடும்பச் சூழலால் ஏற்படும் மன அழுத்தத்தை ஒருபுறமும், இசையின் மீதான ஆர்வத்தையும் வயதில் மூத்தவர் மீதான காதலையும் தனது துல்லியமான முகபாவனைகளால் கைதட்டல் பெறுகிறார். முக்கியமாக, நாயகனிடம் உரிமையோடு பேசும் சுவாரஸ்யமான தருணங்களிலும், கிட்டார் வாசிக்கும் காட்சிகளிலும் தனித்துவமான ஈர்ப்பை ஏற்படுத்துகிறார். கதாநாயகியின் மாமனாக வரும் வினய் ஃபோர்ட் குடும்பத் தலைவனாக நடித்தபடி காட்டும் தேவையற்ற சந்தேகப் பார்வையாலும், கோவா காட்சிகளில் செய்யும் கலாட்டாக்களாலும் தனித்து நிற்கிறார். விரசமில்லாத ஒரு காதல் மலரை தென்றலின் தாலாட்டில் பூக்கவைத்திருக்கிறார் இயக்குநர் கிரிஷ். ஆங்காங்கே நகைச்சுவை முத்துக்களை சிதறவிட்டிருப்பது பார்வையாளர்களை சோர்வடையாமல் பார்த்துக் கொள்கிறது. ஆபாசமில்லாத உரையாடல்கள், நேர்த்தியான திரைக்கதை, ஓடையில் தண்ணீர் தடையின்றி ஓடுவதுபோல் படத்தொகுப்பு அத்தனையும் பெத்தலகேம் குடும்ப யூனிட்டில் சங்கமிக்கிறது. “காதலுக்கு கண் இல்லை” என்ற பழமொழியையும் தாண்டி காதலுக்கு வயதும் ஒரு தடையில்லை என்பதை கவிநயத்தோடு சொல்லிதிருக்கிறார் இயக்குநர் கிரிஷ் ஏ.டி.