“இம்மார்டல்” திரைப்பட விமர்சனம்

சுமார் 1000 வருடங்களுக்கு முன், ஒரு பெண்ணுக்கு ராட்சச உருவத்தில் குழந்தை ஒன்று பிறக்கிறது. இந்த குழந்தையை கொண்டு போய்விடு என அந்த பெண்ணின் கணவரிடம் பிரசவம் பார்த்த மூதாட்டி கூறுகிறார். இதனால் அந்த குழந்தையை அங்கிருந்து தொலைதூரத்திற்கு எடுத்து சென்று விட்டுவிடப்படுகிறது.  அங்கிருந்து அப்படியே கட் செய்தால், 2026-ல் தனது மாமா பிரிண்டிங் பிரஸில் வேலை பார்த்து வரும் ஜி.வி. பிரகாஷ், வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருக்கிறார். அப்போது தன்னுடைய வீட்டில் ரூம் ஷேரிங் உள்ளது, மாதம் ரூ. 5,000 தான் வாடகை என கயாடு லோஹர் சொல்ல, அவருடைய அழகில் மயங்கி உடனடியாக அந்த வீட்டில் குடியேறுகிறார் ஜி.வி. ஜி.வி. பிரகாஷுக்கு கயாடு லோஹருடன் இருப்பதே மகிழ்ச்சியாக உள்ளதாக முதல் சில நாட்கள் அப்படியே சென்றுவிடுகிறது. ஆனால், அதன்பின் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்கள் மீது ஜி.வி-க்கு சந்தேகம் எழுகிறது. இதனால் குழப்பத்தில் சிக்கிக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் கயாடு லோஹர் சாதாரண பெண் இல்லை, எதோ ஒரு அமானுஷ்யம் உள்ளது என்பதை அறியும் ஜி.வி, உடனடியாக அந்த வீட்டிலிருந்து கிளம்ப முயற்சி செய்கிறார். அப்போதுதான் அவருக்கு தெரிய வருகிறது, இந்த மொத்த இடமும் கயாடு கட்டுப்பாட்டில் உள்ளது என்று. கயாடு லோஹரிடம் சிக்கிக்கொண்ட ஜி.வி அங்கிருந்து தப்பித்தாரா இல்லையா? கயாடு யார்? இவருக்கும் 1000 வருடங்களுக்கு முன் பிறந்த அந்த குழந்தைக்கும் என்ன சம்பந்தம்? அவர் பின்னணியில் உள்ள கதை என்ன என்பதே இந்த ‘இம்மார்ட்டல்’ படம். கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் அசத்தியுள்ளார். குறிப்பாக கயாடுவிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். நடிப்பில் அவருக்கு இது அடுத்த கட்டம் என்று கூட சொல்லலாம். கதையின் நாயகி நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை கயாடு லோஹர். மொத்த கதையும் இவரை மையப்படுத்தியே உள்ளது என்பதால் அதனை தனது நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அழகில் ஆபத்து ஒளிந்துள்ளது என சிலர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதை இப்படத்தில் செய்துகாட்டி அனைவரையும் மிரள வைத்துவிட்டார்; இப்படத்தின் ஷோ ஸ்டீலர் கயாடுதான். இயக்குநர் மாரியப்பன் சின்னா தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு அழகான திரைக்கதையை வடிவமைத்துள்ளார். முதல் பாதி, படத்தின் மிகப்பெரிய பலம். பதட்டமான காட்சிகள் சீட்டின் முனையில் நம்மை அமரவைக்கின்றன. இரண்டாம் பாதியில் பரபரப்பான காட்சிகள் இருந்தாலும், சில குழப்பங்களும் அதைச் சுற்றி உள்ளன. யாரும் சிந்திக்காத்க கதையென்றாலும் அதை இன்னும் வலுவாக வடிவமைத்து, நாம் ஏற்றுக்கொள்ளும் வகையில் சில விஷயங்களை சொல்லியிருக்கலாம் என தோன்றுகிறது. கிராபிக்ஸ் இன்னும் பக்காவாக இருந்திருக்கலாம். சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒட்டுமொத்த படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். எதிர்பாராத திருப்பங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.