டாக்டர் எம்.ஶ்ரீவட்சன், எம்.கோகுல் கிருஷ்ணன் ஆகியோரின் தயாரிப்பில், சசோ சுந்தர் முருகேசன் இயக்கத்தில், புகழ், பிரேக்யா நயன், ரவி மரியா, கும்கி அஷ்வின், வின்செண்ட் அசோகன், இந்திரன் இளங்கோவன், திடியன் திருசெல்வன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “4 இடியட்ஸ்”. மருத்துவர் வின்சென்ட் அசோகனுக்கு சொந்தமான கடற்கரை பங்களாவில் பல கோடி ரூபாய் பணம் இருப்பதாக தகவல் கசிகிறது. இந்த தகவலை அறிந்துக் கொள்ளும் திருடர்களான புகழ், கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகிய நான்கு பேரும் அதை கொள்ளையடிக்க திட்டம் போட்டு பங்களாவுக்குள் நுழைய முயற்சிக்கும் போது, அந்த பங்களாவின் காவலாளி ரவி மரியாவிடம் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால், சிக்கிய திருடர்களுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை ரவி மரியா போட, அதற்கு நான்கு பேரும் சம்மதிக்கிறார்கள். இதற்கிடையே, அந்த கடற்கரை பங்களாவின் உரிமையாளரான மருத்துவர் வின்சென்ட் அசோகன் பற்றியும், காவலாளி ரவி மரியா பற்றியும் நான்கு திருடர்களுக்கும் ஒரு உண்மை தெரிய வர, அச்சத்தில் உறைந்து போகிறவர்கள், அந்த உண்மை தங்களுக்கு தெரிந்தது போல் காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா ?, பங்களாவின் உரிமையாளர் மற்றும் காவலாளியின் மர்மம் நிறைந்த பின்னணி என்ன ? என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘4 இடியட்ஸ்’ கதையின் நாயகன் என்ற அந்தஸ்த்துடன் நடித்திருக்கும் புகழிடம் பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் நகைச்சுவை எதுவும் இல்லை. புகழ் உடன் கூட்டணி அமைத்திருக்கும் கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகியோரது நிலை புகழை விட பரிதாபம். இவர்களுடன் சேர்ந்து காமெடி என்ற பெயரில் மக்களை கடித்துக் குதறி இருக்கிறார் ரவி மரியா. வின்சென்ட் அசோகன் தனக்கான பணியை குறையின்றி செய்திருக்கிறார். வித்தியாசமான முறையில் பிரக்யா நயனை பயன்படுத்தியிருப்பவர்கள், அவர் மூலம் கவர்ச்சி பாடல் ஒன்றை வைத்து பார்வையாளர்களை குஷிப்படுத்தியிருக்கிறார்கள்.
4 இடியட்ஸ் திரைப்பட விமர்சனம்
