யுவர்பேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சந்தோஷ் இயக்கி வருகிறார். குணசித்திர நடிகர் மைம் கோபி இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். வனவிலங்குகள் நடமாடும் அடர்ந்த காடுகளில் நடைபெற வேண்டிய படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது ஊட்டியைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தனது கதாபாத்திரத்தில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு நடித்து வரும் மைம் கோபி, இதுவரை தான் நடித்த படங்களில் தனக்கு ஜோடியாக நடிப்பவர் யார் என்று பெரிதாக கேட்டதில்லை. ஆனால், இந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் ஒரு பெண்ணை காதலிப்பதாகக் கூறப்பட்டுள்ளதால், “என்னுடைய காதலி யார்?” என்ற கேள்வியை தயாரிப்பு நிறுவனத்திடம் ஆர்வத்துடன் கேட்டுள்ளார். இதற்கு தயாரிப்பு தரப்பினர், “அது ஒரு சஸ்பென்ஸ்… படப்பிடிப்பு தளத்திலேயே தெரிந்து கொள்வீர்கள்” என்று கூறியுள்ளனர்.*******
தனது காதலி யார் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருக்கும் மைம் கோபிக்கு, அந்தக் கதாபாத்திரம் யார் என்பதை கடைசி வரை ரகசியமாக வைத்திருக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு தளத்திலேயே தனது காதலியை மைம் கோபி சந்திக்கப் போகிறார் என்று இயக்குநர் சந்தோஷ் தெரிவித்துள்ளார். இதனால், ஊட்டியின் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தனது ‘காதலியை’ சந்திக்கும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் மைம் கோபி.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததும், விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கவுள்ளது. காதலி யார் என்ற எதிபார்ப்புடன் உருவாகி வரும் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்…

