பலதுறைக் கலைஞர்களை ஒருங்கிணைத்து* *எஸ்.பி. சரவணனன் அளித்த நெகிழ்ச்சிப் பாராட்டு

*​இயல், இசை,  கூத்(து)* எனும்மூன்று தமிழும் இங்கே

           ஏறாத  மலைதனிலே  ஏறு கின்ற

முயற்சியில்தான் இருக்கின்ற தென்றால் மெய்தான்!

     முத்தமிழில் இன்றளவில் *இசைத்த மிழ்க்கே*

முயற்சிபல இருந்தாலும் முயல்வோ ரைத்தான்

        முன்னேற்றி ஆதரிக்க ஆர்வம் கொண்டே

அயராமல்  ஆணி வேராய் நண்பர் *எஸ்.பி.*

*சரவணனார்* அதைச்செய்து வருகின்றாரே!

​அமர்க்களத்தோ(டு) ஆர்ப்பாட்டம் எதுவும் இன்றி

      அழகு-ஒழுங்கு நேர்த்தியொடும் நேரத் தோடும்

சமர்த்தாகக் கலைஞர்களை ஒருங்கிணைத்துச்

      சகலவித மரியாதை சிறப்புச் செய்து

*விமர்சகன்* என் கின்றதோர் மின்சார்ந் திட்ட

         மேன்மைமிகு ஊடகத்தார் நோக்கம் வெல்க!

*”நமக்கான ஊடகமே விமர்ச கன்”* இந்

         நம்பிக்கை ஊட்டிவளரும் நண்பர் வாழ்க!

​பொதுவாகப் *பாடகர்கள்,* இசையமைக்கும்

*புதியவர்கள்,* *இசைக்கருவி வாசிப்போர்,* நாட்டில்

அதிவேக மாய்வளரும் நாட்டி யத்தின்

      அருமைமிகு இளம்பெண்கள் தம்மை  என்றும்

பொதுமேடை களில்நிறுத்திப் பெருமை செய்து

      புத்துணர்ச்சி அவர்க்கூட்டி வளர்க்கும் எண்ணம்

இதுவரைக்கும் யார்க்குண்டாம் கேட்டால் ; உள்ளார்

     *எம்சரவ ணனார் எஸ்.பி* ; கலைஞர் சொல்வார் !

​தம்முடைய விமர்சகன்ஊ டகத்தைக் கொண்டே

      தளராமல் *எஸ்.பி.எஸ்.* முழுமூச் சாகச்

செம்மையுடன் கலைஞர்களை ஒருங்கிணைத்துச்

      சிறப்பித்து வருகின்றார் ;  அதனால் இங்கே

அம்மம்மா… எனப்பல்லோர் வியந்து போற்றும்

     அளவுக்குக் கலைஞர்களும் மகிழக் கண்டே

சும்மாஎன் எழுதுகோல் இருந்தி டாமல்

     தூயமனத் துடன்வாழ்த்தை அவர்க்குச் சொல்லும்!

                                                                              *பாதாசன்*