யூடியூப் சேனலில் என்ன என்ன இனிக்குது ஏதேதோ நினைக்குது என்ற பாடலை கேட்க நேர்ந்தது. இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடலாகும். அந்த பாடலை பாடியவர்கள் மலேசியாவைச் சேர்ந்த மேடைப்பாடகர்கள் டிஎம்எஸ. குணா மற்றும் ஜோதி ஆகிய இருவரும் பாடியிருந்தார்கள். அவர்கள் பாடியதைவிட, அந்த பாடலை அவர்கள் இருவரும் ரசித்துப்பாடிய விதம்தான் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த பாடலை டி.எம்.செளந்திரராஜன் அவர்களும் பி.சுசிலா அம்மையாரும் பாடியிருப்பார்கள்.

இந்த பாடலை பாடிய குணாவும் ஜோதியும் பாடிய விதமே அலாதியானது. அந்த பாடலுக்குள் இருவரும் உருகிப்போனார்கள் என்று சொல்வதைவிட கரைந்து போனார்கள். பிறகு பீனிக்ஸ் பறவைபோல பறந்து வந்து பாடினார்கள். ஜோதி “என்ன என்ன இனிக்குது ஏதோதோ நினைக்குது” என்று பாடும் போது குணாவை பார்த்து தனது இரு புருவங்கைளையும் மேலும் கீழும் அசைத்து புன்சிரிப்புடன் பாடுகின்ற காட்சியும், “வண்ண வண்ண தோற்றங்கள் ஐந்து ரூபா கண்ணை வட்டமிட்டு மயக்குது ஐந்து ரூபா” என்று பாடும்போது ஜோதி கண்ணை மூடி திறந்து புன்சிரிப்புடன் குணாவை பார்த்தபோது நம் மனதுக்குள் சிட்டுக்குருவி பறப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பிறகு இசைக்கு தகுந்தாற்போல் தன் தோள்கள் இரண்டையும் மேலும் கீழுமாக அசைத்து ஆடியபடி நிற்பார்.

உடனே குணா “கல்லால் அடித்த அடி வலிக்கவில்லை அந்த காயத்திலே உடம்பு வலிக்கவில்லை கண்ணால் அடித்த அடி வலிக்குதடி அந்த காயத்திலே உடம்பு துடிக்குதடி” என்று பாடும்போது தனது கைவிரலால் ஜோதியின் கண்களை தொடுவதுபோல் வந்துவிட்டு உடனே சிவாஜிகணேசன் நடப்பதைப் போல் பின்னோக்கி நடந்து செல்வார். பாடுவது எம்ஜிஆர் பாட்டு, ஆனால் நடப்பது சிவாஜியை போல் நடப்பார். இதை புன்னகையோடு ஜோதி ரசித்துப்பார்ப்பார். இந்த இருவர்களுக்குள்ளும் நான் புகுந்து உருகிப்போனேன். பிறகு இசைக்கருவிகள் இசைக்கும். அந்த இசைக்கு தகுந்தாற்போல் ஜோதி தன் உச்சிமுதல் உள்ளாங்கால் வரை பாம்பு நெலிவதைப்போல் நின்ற இடத்திலிருந்தே நெலிந்தபடியும் வெட்கத்தில் தலை குனிந்து சிரித்தபடியும் நின்று கொண்டிருப்பார்.

பிறகு தரையில் கால்கள் மிதந்தபடி அசைந்தாடி குணாவை கடந்து மறுபக்கம் செல்வார். உடனே பாடலின் அடுத்த வரியாக “தாயார் அணைத்திருந்த மயக்கமுண்டு நான் தந்தை மடியிருந்த பழக்கம் உண்டு நீ யாரோ நான் யாரோ தெரியாது” என்ற பாடிக் கொண்டே குணாவின் அருகில் சென்று தன் இடது கையை ஒரு சுழட்டு சுழட்டுவார். அந்த சுழட்டிலும் முகபாவத்திலும் ஆயிரம் எண்ணங்கள் அலைமோதுவதை அப்பாடலிலின் ரசிகனாக பார்த்தால் அர்த்தம் புரியும். உடனே குணா “என்ன என்ன நினைக்குது ஏதேதோ நினைக்குது” என்று தனது மூக்கால் லேசாக முனைங்கி ரசனையுடன் பாடுவது அழகாக இருக்கும். பாடலின் அடுத்த வரியாக “வரவர இதயங்கள் வளர்ந்து வரும் வளமான எண்ணங்கள் மிதந்து வரும் பலபல ஆசைகள் தொடர்ந்து வரும் பருவத்தின் மேனி புரிந்துவிடும்” என்று பாடும்போது

குணாவின் வலது கை ஜோதியின் முன் நடனமாடும். பிறகு ஜோதி “ஒருவருள் ஒருவரை ஒன்றாக்கி வைத்தது” என்று பாடி முடிக்கும் போது குணா “விட்ட குறை தொட்ட குறை ஐந்து ரூபா” என்று பாடுவார். இவ்வரிகளை இருவரும் பாடும்போது அவர்களின் உடல் மொழி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் பாடலை ரசித்துப் பாடுவார்கள். குணா பாடுவது டிஎம்எஸ்சிடம் குரலை இரவலாக வாங்கி பாடியதுபோல் இருக்கும். ஜோதியின் குரல் அப்படியே சுசிலா அம்மையாரை நினைக்க வைக்கிறது. குயிலுக்கு ஜோதிதான் தன்குரலை இரவலாக கொடுத்தாரே என்று எண்ணத் தோன்றுகிறது. அவ்வளவு மென்மையான குரல் ஜோதியின் குரல்.

அவர் இப்போது மேடைகளில் பாடுவதை நிறுத்திக் கொண்டதாக கேள்வி பட்டு வருந்தினேன். அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் கேள்விபட்டேன். திருமணம் ஆனதில் மகிழ்ச்சி. ஆனால் பாடுவதை நிறுத்திக் கொண்டது துயரச் செய்தி. மேடையில் ஜோதியாக பிரகாசிக்க வேண்டிய குத்துவிளக்கை குடத்துகுள் வைத்து விட்டார்களே.

