ஜித்தீஷ் விஷ்வம்பரம், அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோரின் தயாரிப்பில், சஞ்சீவ் பழவூர் இயக்கத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், விஜயலட்சுமி வீரமணி, கமலேஷ் ஜெகன், ஷாஷோ, பூர்ணிமா பாக்கியராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, லொள்ளுசபா சாமிநாதன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “என்ன விலை”. ராமேஷ்வரத்தில் மீனவராக இருக்கும் கருணாஸ், ராமேஸ்வரம் கடலில் பக்தர்கள் வீசி எறியும் காணிக்கை காசுகளை கடலில் மூழ்கி எடுக்கும் தொழிலை செய்து வருகிறார். ஒருநாள் அப்படி கடலில் வீசி எறிந்த காசுகளை கருணாஸ் கடலில் மூழ்கி எடுக்கும்போது அவரது கையில் ஒரு பதக்கம் சிக்குகிறது. அந்த பதக்கத்தை கடற்கரை காவலரிடம் கொடுக்கிறார். அந்த பதக்கத்தில் பதிக்கப்பட்ட கல்லில் ஒரு நீலநிற கல்லை கருணாசுக்கு தெரியாமல் நெம்பி எடுத்துக் கொண்டு, அந்த பதக்கத்தை கருணாசிடமே திருப்பி கொடுத்து விடுகிறார். மறுநாள் அந்தப் பதக்கத்தை கருணாஸ் காவல் நிலையத்தில் இருந்த இரண்டு காவலர்களிடம் கொடுத்து விடுகிறார். அந்த பதக்கம் நூற்றாண்டை கடந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ளது என்று தெரியவருகிறது. இதற்கிடையே காவலர் திருடிய நீலநிறக்கல்லை மூன்று லட்ச ரூபாய்க்கு விற்று மூன்று காவலர்களும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். இதற்கிடையில் அந்த பதக்கம் சமூக ஊடகங்களில் வெளியாகிவிடுகிறது. தங்களை காப்பாற்றிக் கொள்ள அந்த மூன்று காவலர்களும், “அந்த பதக்கத்தை கோவலிலிருந்து கருணாஸ் திருடியதாகவும் அதை மீட்டு காவல் நிலையத்தில் வைத்திருப்பதாகவும் திருடிய கருணாசை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாகவும் மேலதிகாரியிடம் அந்த காவலர்கள் கூறுகிறார்கள். தீவிர விசாரணையில் கருணாஸ் நிரபராதி என்று நீதிமன்றம் அவரை விடுதலை செய்கிறது. ஆனால் “நிரபராதியான என்னை கைது செய்து சிறையில் அடைத்ததால் எனது மானம் போய்விட்டது. எனக்கு நஷ்ட்ட ஈடாக பணம் தேவையில்லை. ஆனால் இழந்த என் மானத்துக்கு என்ன விலை? என்று நீதிபதியிடம் கருணாஸ் கேட்கிறார். அதற்கு நீதிபதியின் தீர்ப்பு என்ன? என்பதுதான் கதை.
கருணாஸ் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அடிதாங்க முடியாமல் கதறி அழுகின்ற காட்சியிலும், பிணையில் விடுதலையாகி வீட்டிலிருக்கும் நாம் மீண்டும் கைதாகப் போகிறோம் என்று தெரிந்ததும் பயந்து நடுங்கி கட்டிலுக்குக்கீழ் ஒளிந்துகொள்ள முயல்வதிலும் கருணாஸ் தன் உடல் மொழியால் கதைக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார். வழக்கறிஞராக கலக்கியிருக்கும் நிமிஷா சஜயன் நடித்திருக்கும் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களின் மனதில் ஒரு சகோதரியாக குடியேறியிருக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கமலேஷ் ஜெகன், லொள்ளு சபா, சுவாமிநாதன் ஆகியோர் நடிப்பு கதைக்கு கைகொடுத்திருக்கிறது. அனைவரும் தங்களது அனுபவத்தை குறைவின்றி கொடுத்து நடித்திருக்கின்றார்கள். சாம் சி.எஸ். இசை கதைக்கு சுவாச மூச்சாக உள்ளது. ராமேஸ்வரத்தின் பின்னணியை கதைக்கு தகுந்தாற்போல் காட்சிப்படுத்தி உள்ள ஆல்பா ஆண்டனி ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. மனிதனின் மானத்துக்கு என்ன விலை என்பதை இலைமறைவு கனியாக சொல்லியிருக்கும் இயக்குநரின் உணர்வை பாராட்ட வேண்டும்.

