பாரத ரத்னா இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் 110 வது பிறந்தநாள் அன்று அவரது சுயசரித திரைப்படத்தை நடிகர் கமலஹாசன் கிளாப் அடித்து தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், ” நான் குழந்தை நடிகராக நடிக்கும்போது அந்த வாழ்க்கை அப்படியே தொடருமா? என்றெல்லாம் தெரியாது. வேடிக்கைக்காக என்னுடைய அப்பா சினிமாவிற்கு அனுப்பி வைத்தார். படிக்க வேண்டும் என்று சொன்னார். எனக்கு படிப்பு வரவில்லை. அதன் பிறகு தான் எனக்கு இசை என்றால் என்ன என்பது புரிய தொடங்கியது. படிப்பு வரவில்லை என்றதும்.. எது புரிந்ததோ..! அதை செய்யலாம் என்று எண்ணினேன். அதன் பிறகு இசை புரிந்ததால் அதைத் தொடர்ந்தேன். ஆனால் அதிலும் எனக்கு பிரமாதமாக வரவில்லை. அதன் பிறகு தேடித்தேடி டான்ஸ் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு டான்ஸ் அசிஸ்டன்டாக இருந்து, அசிஸ்டன்ட் டைரக்டர் ஆகி கிளாப் அடித்தேன். அதன் பிறகு இப்போது மீண்டும் கிளாப் அடித்திருக்கிறேன். இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த படத்தின் இயக்குநரை நான் சந்தித்திருக்கிறேன். அவர் எல்லீஸ் ஆர் டங்கன். இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான காட்ஃபாதர். அவர் எண்பத்தியெட்டாவது வயதில் டாக்குமென்டரி படத்தை எடுப்பதற்காக இங்கு வந்தார். அப்போது அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவரிடம் சென்று கையெழுத்தும் வாங்கினேன். ஆனால் அவரிடம் இணைந்து பணியாற்ற முடியவில்லையே..! என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தை நீக்கியதற்காக இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. எம் எஸ் அம்மா – இசையின் ஒன்றிணைக்கும் சக்தி. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் குரல். அவர் தமிழ், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் பாடியுள்ளார். தமிழ்- தெலுங்கு- கன்னடம் என எல்லா மொழிகளிலும் அவருடைய உச்சரிப்பு உன்னதமானது. இது இன்றும் என்னைப் போன்றவர்களுக்கு பாடமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் அவர் குரலில் ஒலித்த ‘ரங்க பூர்வ விஹாரா..’ பாடலை கேட்டிருப்பார்கள். சுப்ரபாதத்தை ஆலயங்களில் தினமும் ஒலிக்க விடுகிறார்கள். லலிதா சகஸ்ரநாமம் என பல பாடல்களாக இருக்கட்டும். இவற்றையெல்லாம் விட ‘ரங்கபூர்வ விஹாரா..’ பாடலை கேட்கும் போது மனதிற்கு ஒரு சின்ன சந்தோஷ உணர்வு பரவும். அது எம் எஸ் அம்மாவை விட மூத்த இசைக்கலைஞர் ஒருவரின் கம்போசிங்கில் உருவானது. இருந்தாலும் அந்தப் பாடல் எம் எஸ் அம்மாவின் குரலில் பாடும்போது அந்த பாடலுக்கான கம்போசிங்கிற்கு என்ன வயதோ.. அதை விட.. அதை தன்னுடைய இனிய குரலில் பாடி அதன் வயதை மும்மடங்காக்கி விட்டார்கள். நான் அவர்களை ரசிகனாக தான் பார்த்திருக்கிறேன். அவர்களை அருகில் இருந்து பார்ப்பதற்கு அனுமதி இல்லை. எனக்கு அதற்கான அருகதையும் இல்லை.இந்த விழா அரங்கத்திற்கு அருகே சின்னதொரு மியூசிக் அகாடமி இருக்கிறது. அவர்தான் பாலமுரளி கிருஷ்ணா. அவரிடம் தான் நான் இசையை கற்றுக் கொண்டேன். அவர் பலமுறை எம்.எஸ். அம்மாவை பற்றி பேசுவதை கேட்டிருக்கிறேன். அப்போதுதான் எம் எஸ் அம்மாவின் பெருமையை புரிந்து கொள்ள முடிந்தது.பிறகு நான் ‘ஹே ராம்’ படத்தை உருவாக்கும் போது அவர்களை சந்திக்க நேர்ந்தது. சுயநலமாகத்தான் அவர்களை சந்தித்தேன். ‘ஹே ராம்’ படத்தின் பாடலை அவர்தான் பாட வேண்டும் என விரும்பினேன். ஏனெனில் என்னுடைய நாயகனான கரம் சந்த் காந்தியை பற்றிய படத்தில் அவருடைய குரல் இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் அந்த விருப்பம் நிறைவேறவில்லை. ஏனென்றால் அவருக்கு அந்த தருணத்தில் உடல்நலக்குறைவு இருந்தது. அந்த வீட்டில் இருந்து கிடைத்த பரிந்துரையின் அடிப்படையில் தான் நான் டி கே பட்டம்மாளை சந்தித்தேன். அவர்களுக்கும் உடல் நலம் சரியில்லை. இருப்பினும் அவர்களை சக்கர நாற்காலியில் அமர வைத்து அவருடைய குரலை பதிவு செய்தோம்.நான் எம் எஸ் அம்மா- டி கே பட்டம்மாள்- எம்எல் வசந்தகுமாரி – ஆகிய மூன்று சக்தி வாய்ந்த ஐகானிக் பெண்மணிகளிடம் நெருங்கி பழகியுள்ளேன். இந்த மூவரும் என் தலையை தொட்டு ஆசீர்வதித்திருக்கிறார்கள். அதனால் தான் இவர்கள் கேட்டதும் இந்த நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டேன். இது எனக்கு கிடைத்த கௌரவம்.இந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் குறிப்பாக அனிருத்துக்கும் வாழ்த்துக்கள்.
எப்படி பாலச்சந்தருக்கு ‘அரங்கேற்றம்’ படத்தின் மூலம் திடீர் திருப்பம் ஏற்பட்டதோ…எப்படி இயக்குநர் கே விஸ்வநாத்திற்கு ‘சங்கராபரணம்’ படத்தின் மூலம் திடீர் திருப்பம் ஏற்பட்டதோ…இந்தப் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அனிருத்தின் திரையிசை பயணத்திலும் மிகப்பெரிய மாற்றமும், திருப்புமுனையும் ஏற்படும். இந்தப் படத்தின் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை அனிருத் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அவர் தற்போது செல்லும் பாதையை நான் நன்கு அறிவேன்.இயக்குநர் கௌதமிற்கு இது மிகப்பெரிய பொறுப்பு. இதற்காக நீங்கள் உயிரை கொடுக்க வேண்டாம். கடுமையாக உழைத்தால் போதும். இந்த படத்தில் தவறு நேராது. ஏனெனில் இப்படத்திற்கான திரைக்கதையை எம்எஸ் அம்மா எழுதிவிட்டு சென்றிருக்கிறார்கள். அதை மெருகேற்றினால் போதும். இயக்குநரின் பணியை எம்எஸ் அம்மா எளிதாக்கி விட்டு சென்றிருக்கிறார்.
எம் எஸ் அம்மா பூஜைக்கு உரியவர்கள் என்பதை விட.. நம் அனைவரின் பிரியத்திற்கு உரியவர்கள். அதை நீங்கள் திரையில் காண்பிக்க வேண்டும். இங்கு அவர்களை வணங்குவதற்கு நிறைய பேர் உள்ளனர். அவர்கள் காட்டிய அன்பு – பாசம்- அதைத்தான் திரையில் காண்பித்திட வேண்டும்.
இந்தியாவின் பான் இந்திய லேடி சூப்பர் ஸ்டார் எம் எஸ் அம்மா தான். அவர்களிடம் ஏராளமான திறமை இருந்தது. அவர்கள் நடிகை மட்டுமல்ல வீணை வாசிப்பார்கள்… நடனம் ஆடுவார்கள்… ‘மீரா’ படத்தின் பாடல்கள் இன்றும் நம் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
மைக்கேல் ஜாக்சனின் படத்தை உருவாக்கும்போது அந்த நடிகருக்கு எவ்வளவு பதட்டம் இருந்திருக்கும். அந்த பதட்டம் ரஷ்மிகாவிற்கும் இருக்கும். அதனை களைவதற்கு அருமையான குழுவும் இருக்கிறது. அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
என்னால் ‘அவ்வை சண்முகி’ போன்ற வேடத்தை போட்டு நடிக்க முடியும். ஆனால் எம்.எஸ். அம்மாவாக ஒருபோதும் நடிக்க முடியாது. அதனால் இந்த கதாபாத்திரத்தை நீங்கள் ஏற்று தைரியமாக நடியுங்கள். எம் எஸ் அம்மா இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி. குறிப்பாக தென்னிந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி. இந்த திரைப்படக் குழுவினரை எல்லீஸ் ஆர் டங்கன் சார்பாக வாழ்த்துகிறேன். அவர்தான் என்னை இங்கு சென்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு வா என்றார். இதெல்லாம் நம்முடைய எமோஷன்.
இந்த அரங்கம் ஏராளமான இசை கலைஞர்களையும், இசை ரசிகர்களையும் உருவாக்கியது. இங்கு இந்த விழா நடைபெறுவது தான் பொருத்தமானது. எம் எஸ் அம்மாவின் புகைப்படம் இங்கு மட்டுமல்ல திருப்பதியிலும் இருக்கும்… ஐக்கிய நாடுகள் சபையிலும் இருக்கும்…. அவருடைய புகைப்படம் இல்லாத இடமே இல்லை. எனக்கு எல்லீஸ் ஆர் டங்கன் தான் ஹீரோ. எங்கிருந்தோ இங்கு வந்து தமிழில் படத்தை இயக்கியிருக்கிறார். அதே மரியாதையை நான் இப்படத்தின் தயாரிப்பாளர்களான அல்லு அரவிந்த் -ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு- ஆகியோருக்கு கொடுக்க வேண்டும். ஏனெனில் நான் கனவு கண்ட தென்னிந்தியா… கடந்த காலத்தில் அப்படித்தான் இருந்தது. சென்னை ஒரு ஹப்பாக இருந்தது. தற்போது மீண்டும் அது உருவாகிக்கொண்டிருக்கிறது. அது ஒரே ஊரில் மட்டும் இல்லாமல் பெங்களூருவாகவும்… ஹைதராபாத் ஆகவும்… சென்னை ஆகவும்… இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒரே குடும்பம். இதை எப்போதும் மறந்து விடக் கூடாது. தற்போது ஒவ்வொரு படங்களும் அந்தந்த மொழிகளில் வெளியாகி வெற்றி பெற போகிறது.
இதை நான் எப்படி சொல்கிறேன் என்றால் …நான் ‘மரோ சரித்ரா’ படத்தின் நாயகன். நான் மட்டுமல்ல எனக்கு முன்னாடியே மற்றொரு ஹீரோவும் இருக்கிறார். அவர் நாகேஸ்வரராவ். அவர் நடித்த ‘தேவதாஸ்’ இங்கு வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்த திராவிட குடும்பம். இதில் அரசியலை நுழைத்து குழப்பிக் கொள்ள வேண்டாம். இசை அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதிலும் எம் எஸ் அம்மாவின் குரல் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் பெற்றது . அவரது சுயசரிதையை உருவாக்குவதால் இந்தியா பெருமை கொள்கிறது. குறிப்பாக தமிழகமும் பெருமை கொள்கிறது. இந்தப் படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டதை நான் இந்தியனாகவும் பெருமிதம் கொள்கிறேன்” என்றார்.

