“நல்ல திரைப்படம்” விமர்சனம்

ஹரிஷ் சினிமாஸ் சார்பில் ஏ.அழகு பாண்டியன் தயாரிப்பில் சி.பிரபுராம் இயக்கத்தில் டாக்டர் ஏ. ஹரிஷ், தனலட்சுமி, மொட்டை ராஜேந்திரன் கல்கி ராஜா, ரமா ராஜேந்திரா, ரமா பிரியதர்ஷினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “நல்லபடம்”.  ராஜபாளைய்த்தில் ஹரிஷ் மொடாக் குடிகாரணாக இருக்கிறார். காலையிலிருந்து இரவு வரைக்கும் மதுபாட்டிலோடே தனது நண்பர்களுடன் ஊர்சுற்றுவார். அவர் வாழும் கிராமத்தில் மதுகுடிப்பவர்களின் உரிமைக்காக நடுவீதிக்கு வந்து போராடும் பழக்கமுள்ளவர். அதற்காகவே  ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற ஒரு சங்கத்தை ஆரம்பித்து அதன் தலைவராகவும் இருக்கிறார். இதனால் அவ்வூரிலுள்ள குடும்ப பெண்கள் மிகவும் வறுமைக்கு ஆளாகுகிறார்கள். அவ்வூர் ஆண்களுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை. இவ்வாறு இருக்கும்போது அரசு திடீரென்று மதுவிலக்கை அமல்படுத்துகிறது. குடும்ப பெண்கள் குதூகலமாக மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால் மதுவுக்கு அடிமையாகியிருக்கும் ஆண்கள் தற்கொலைக்கு முயல்கிறார்கள். இதனால் மது குடிப்போர் சங்கத்தின் தலைவராக இருக்கும் ஹரிஷ், மீண்டும் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று அரசாங்கத்தோடு போராடுகிறார். முடிவு என்னனாது என்பதுதான் மீதிக்கதை.

படத்தின் முன்பகுதி முழுவதும் மதுவில் மக்கள் தள்ளாடுகிறார்கள். பின்பகுதியில். மீண்டும் மதுக்கடையை திறந்து அரசியல்வாதிகள் தள்ளாடுகிறார்கள். இந்த இருவர்களின் தள்ளாட்டையும் வைத்து, இயக்குநர் சி.பிரபுராம் தள்ளாடாமல் தன் சிந்தனை தேரோட்டத்தை வெள்ளித்திரையில் ஓட்டியிருப்பது பாராட்டுதலுக்குறியது.  போதையில் மிதந்து கொண்டிருக்கும் கதாபாத்திரமாகவும், காதல் காட்சிகளிலும், அதிரடி காட்சிகளிலும் ஹரிஷ் தேவையான அளவுக்கு மீறாமல் தனது நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக குடிக்கு அடிமையான மனிதனின் தடுமாற்றத்தையும், மதுவிலக்கால் ஏற்படும் தவிப்பையும் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். ஹரிஷை காதலிக்கும் பெண்ணாக தனலட்சுமி, காதலுக்காக போராடும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். கதாநாயகனின் அம்மாவாக ரமாவும், நண்பர்களாக கல்கி ராஜா மற்றும் மொட்டை ராஜேந்திரனும் தங்களுக்கான கதாபாத்திரங்களுக்கு உயிரோட்டம் கொடுத்துள்ளார்கள். ஒளிப்பதிவாளர் ஜெ.ஹாரிஷ், இசையமைப்பாளர் சஜிஷ் னாசேவியர் ஆகிய இருவரும்  படத்துக்கு பக்கபலமாக தோள் கொடுத்து சுமந்திருக்கிறார்கள்.  மேலோட்டமான திரைக்கதையை அமைத்து சமுதாய சிந்தனையுடன் எடுக்கப்பட்ட நல்லபடம்.