“ட்ரோன்ஸ்” திரைப்பட விமர்சனம்

சென்னை.அக்.17-  ஜி எம் மோர்கன் பிலிம்ஸ் ஜி எம் மோர்கன் தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில்  டிராவிட் செல்வம், சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, சினிமா வாலா சதீஷ், குரேஷி, ஆர் ஜே தீபக், சசி செல்வராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ட்ரோன்ஸ்”.  டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர்), தீபக் மூவரும் கல்லூரியில் இடைநீக்கம் செய்யப்பட்டதால் பிளாக் ஹோல் எனப்படும் ஒரு விஞ்ஞான கூடத்தில் தங்குகின்றனர். அங்கிருந்து வெளியே செல்ல முடியாத நிலையில் ட்ரோன் மூலம் வெளி உலகத்தை பார்க்கிறார்கள். அப்போது ஏஞ்சல் சித்தி இத்னானி கண்டு காதல் கொள்கிறார் டிராவிட் செல்வம். இந்த காதலை பாட்டி சூனியக்காரக் தேவதர்ஷினி எதிர்க்கிறார். அத்துடன் அம்மூவரையும் தனது மாயக் கோட்டைக்குள் அடைத்து வைக்கிறார் தேவதர்ஷினி. இதற்கிடையில்  நகரில் மர்ம கொலைகள் நடக்கின்றன.  அதை போலீஸ் துப்பறிய முயல்கிறது. சூனியக் கிழவியிடம் சிக்கிய நண்பர்கள் என்ன ஆனார்கள்?. நகரில் நடக்கும் கொலைகளுக்கு யார் காரணம் என்பதை கலகலப்பாகவும் நகைச்ஷ்வையாக சொல்லியிருக்கும் இயக்குநர்,  தான்சிறுவயதில் படித்த சூனியக் கிழவி, பறக்கும் தட்டு, தேவதை வருகை என்று பல்வேறு கதைகளை சொல்லும் புத்தகங்களை படித்த நியாபகத்தை ஒரு படமாக எடுத்திருக்கிறார் போலிருக்கிறது. ஆனால்,  காதல் என்றால் என்ன? எது காதல்? என்பதையும் காதலின் ஆணிவேரை உச்சக்கட்ட காட்சியில் காட்டியவிதமும் கைத்தட்ட வைக்கிறது. படத்தின் முதல் பாதி அறிமுக காட்சிகளாகவே செல்கிறது  இடைவேளைக்குப் பிறகு உச்சக்கட்ட காட்சிவரை படம் விறுவிறுப்பும் கலகலப்பும் மாய தந்திரங்கள் என வணிக ரீதியாக படம் செல்கிறது. டிராவிட் செல்வம்  தனது வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு நடனம் நடிப்பு நகைச்சுவை என அனைத்திலும்  குறை வைக்காமல் நடித்திருக்கிறார். தேவதை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தி இத்னானி  நிஜத்திலேயே அழகு தேவதைதான். சில காட்சிகளில் அந்நியன் விக்ரம் போல் மாறி மாறி நடித்து நடிப்பு அரக்கியாக மாறியும் இருக்கிறார். சூனியக்காரி கிழவியாக தேவதர்ஷினி மொத்த பலத்தையும் காட்டி நடித்திருக்கிறார். இந்த உலகில் தன்னை யாரும் அன்பாக நேசிக்கவில்லை என்று உச்சக்கட்ட காட்சியில் மனம் நொந்து அழும்போது உருக வைக்கிறார். சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க துப்பறியும் சாம்புவாக மாறும் இன்ஸ்பெக்டர் சினிமாவாலா சதீஷ் தனக்கு ஒரு காதலி அமையவில்லை என்று புலம்புவதும் உட்சக்கட்ட காட்சியில் அவர் எடுக்கும் முடிவு  எதிர்பார்க்காத காட்சியாக அமைவதுடன் வெடிச் சிரிப்பையும் வரவழைக்கிறது. அஞ்சலி நாயர்,  குரோஷி, ஆர் ஜே.தீபக்  ஏற்ற பாத்திரத்தை நிறைவு செய்திருக்கிறார்கள். ஹரி எஸ்.ஆர். இசை காட்சிகளை தாங்கி நிற்கிறது.ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு  பளிச்சென காட்சிகளை பதிவு செய்திருக்கிறது. மாயாஜால விரும்பிகள் குடும்மத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம் “ட்ரோன்ஸ்”.