சமயமுரளி இயக்கத்தில், ஜெ.டி.சக்ரவர்த்தி, லால், ராதிகா சரத்குமார், சரண் சக்தி, பாலசரவணன், ஸ்மேகா, காளிவெங்கட், ஜாபர் ஷாதிக், மைம்கோபி, சமய முரளி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “எனிமி ஆப் தி ஸ்மக்ளர்”. லால் துபாயில் இருந்துகொண்டு தமிழ்நாட்டில் உள்ள ஜெ.டி.சக்ரவர்த்திக்கு 25 ஆயிரம் கோடி மதிப்பு உள்ள போதை பொருளை கப்பல் மூலம் அனுப்பி வைக்கிறார். அந்த போதைப் பொருள் உள்ள கண்டெய்ணரை ஜெ.டி.சக்ரவர்த்தியிடம் வேலைபார்க்கும் சரண் சக்தியும், பாலசரவணனும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் பல போலியான தஸ்தாவேஸ்கள் தயார் செய்து அந்த 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள உயர்ரக போதைப் பொருள் உள்ள கண்டெய்னரை மிக எளிதாக துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டு வருகிறார்கள். வெளியே வந்த கண்டெய்னரை பாதிவழியில் சுங்கத்துறை ஆணையர் சமயமுரளி மடக்கி பிடித்து விடுகிறார். இந்த செய்தியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கிறார்கள். அந்த செய்தியில் 5 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதை பொருள் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் மீதமுள்ள 20 ஆயிரம் கோடி போதைப் பொருள் எங்கே? என்பதை கண்டுபிடிப்பதுதான் மீதிக் கதை.
இபடத்தை தயாரித்து இயக்கி துங்கத்துறை ஆணையராக நடித்திருக்கும் சமயமுரளி, உண்மையாகவே சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றியவர். அவர் பணியிலிருந்த காலகட்டத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களை அப்படியே திரைப்படமாக்கியிருக்கிறார். சுங்கத்துறையில் நடந்தேறும் தில்லுமுள்ளுகளையும் திருட்டுத்தனங்களையும் அப்பட்டமாக சொல்லியிருக்கிறார்.
குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பு, பணத்துக்காகத் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டோமே என்ற குற்ற உணர்வு, மனைவிக்குத் தனது உண்மையான முகம் தெரிந்துவிட்டதே என்ற பதற்றம் என பல்வேறு உணர்வுகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் கதாபாத்திரத்தில் சரண் சிறப்பாக நடித்துள்ளார்.
பால சரவணன், படத்தின் விறுவிறுப்பான கடத்தல் சம்பவங்களுக்கு இடையே நகைச்சுவையால் ரசிகர்களை ரசிக்க வைக்கிறார். போதைப்பொருள் கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காகத் திட்டமிட்டு வியூகம் அமைக்கும் காவல்துறை அதிகாரியாக சமய முரளி கவனம் ஈர்க்கிறார். குற்றவாளிகளை விசாரிக்கும் விதம், கம்பீரமான உடல்மொழி, விசாரணைக் காட்சிகளில் வெளிப்படுத்தும் தீவிரம் அவரது நிஜ முகத்தை வெளிப்படுத்துகிறது. ராதிகா சரத்குமாரின் அனுபவமான நடிப்பு படத்த்குக்கு தூக்கலாக அமைந்திருக்கிறது. ஜே.டி.சக்கரவர்த்தியும் லாலும் வில்லத்தனத்தில் மிளிர்கிறார்கள். ஷிமேகாவின் நடிப்பு கதாபாத்திரத்தோடு ஒன்றிப்போயிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் காவின் பாஸ்கர், இசையமைப்பாளர் சாம் டானியல் ஆகியோரின் கடின உழைப்பு படத்தில் தெரிகிறது. படத்தின் முன்பாதியையும் பின்பாதியையும் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்தாக படைத்திருக்கிறார் இயக்குநர் சமயமுரளி. ஒரு முழுநீள துப்பறிதல் நாவலை படித்த திருப்தி கிடைக்கிறது.

