திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க சி.ஆர்.ராஜன் தயாரிப்பில், திருஅருள் கிருஷ்ணா இயக்கத்தில் ராஜன் தேஜஸ்வர், ஐரா அகர்வால், ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “அமரம்”. கிழக்கு தொடர்ச்சி மலையில் வாழ்கின்ற கீழ்த்தட்டு இன மக்களுக்கு தலைவராக இருக்கிறார் ஜார்ஜ். இவருக்கு துணையாக இருக்கிறார் ராஜன் தேஜஸ்வர். இவர்களுக்கு முதலாளியாக இருக்கிறார் மேல்தட்டு இனத்தை சேர்ந்த சாய் தீனா. சாய் தீனாவின் கட்டளைப்படி ஐரா அகர்வாலின் தந்தையை கூலிக்காக கொலை செய்துவிட்டு தப்பிக்கிறார் ராஜன் தேஜஸ்வர். தன் கண்முன்னே தந்தையை கொலை செய்த ராஜன் தேஜஸ்வரரை பழிவாங்க அவரை தேடி செல்கிறார் ஐரா அகர்வால். ஆனால் அங்கு அவர் எதிர்பாராத அதிர்ச்சியையும் ஆபத்தையும் சந்திக்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் மீதிக்கதை.
அடர்த்தியான தாடி, முரட்டுத் தோற்றம், அதிகம் பேசாத உடல்மொழி என ராஜன் தேஜஸ்வரின் நடிப்பு கதாபாத்திரத்திற்கு கம்பீரத்தை கொடுக்கிறது. ஒரு கட்டத்தில் அவரது நடிப்பு கதாநாயகத்தின் உச்சம் பெறுவது பார்வையாளர்களை மிகவும் கவர்கிறது. உச்சக்கட்ட சணைக்காட்சி ரசிப்புத்க்தன்மையின் உச்சத்தை தொட்டுவிடுகிறது. பழிவாங்கும் பெண்ணாக ஐரா அகர்வால் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் அழுத்தம் கொடுத்திருந்தால் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும். மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ஹரிஷ் பெராடி ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். மலைவாழ் மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களை கொலைகாரர்களாக மாற்றும் முதலாளிகளின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிய இயக்குநர் அருள் கிருஷ்ணாவை போற்றி கொண்டாட வேண்டும். விழிப்புணர்வை இன்றைய இளைஞர்களின் இதயத்தில் விதைத்திருக்கிறார். மலையின் அழகை நம் கண்களுக்கு குளிர்ச்சியாக படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பரத் குமார். படத் தொகுப்பும் இசையும் படத்தை சலிப்பு தட்டாமல் பார்க்க வைக்கிறது. அந்த வகையில் படத்தொகுப்பாளர் ஶ்ரீராமரும் இசையமைபாளர் மிக்கி ஜே மேயரும் பாராட்டுதலுக்குறியவர்கள்

