குடும்ப தகராறு காரணமாக பெண்ணை வெட்டி கொலை செய்த வழக்கில், இரண்டாவது மனைவியின் மகனுக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை காவல் சரகம், கொத்த தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் தீனதயாளன் என்பவருக்கும் மீனாட்சி என்பவருக்கும் திருமணமாகி, அவர்களுக்கு ராஜரத்தினம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மேற்படி தீனதயாளன் என்பவருக்கு மாரியம்மாள் என்ற மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுக்கு செந்தில்குமார் என்ற மகன் பிறந்துள்ளார். இந்நிலையில் தனது கணவரின் நடத்தை காரணமாக மேற்படி மீனாட்சி என்பவர் தனது மகன் ராஜாத்தினம் என்பவருடன் நல்லாடை பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் மீனாட்சி தனது வாழ்வாதாரத்திற்காக தனது கணவர் தீனதயாளன் என்பவரிடம் ஜீவனாம்சம் வழங்கிட கோரி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மீனாட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டநிலையில் கடந்த 25.02.2017-ம் தேதி மேற்படி மீனாட்சி என்பவர் தீனதயாளன் வீட்டிற்கு ஜீவனாம்சம் கேட்க சென்றபோது அவரது கணவர் தீனதயாளன் மற்றும் தீனதயாளனின் இரண்டாவது மனைவியின் மகன் செந்தில்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி மீனாட்சியை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இறந்த நபரின் மகன் ராஜரத்தினம் என்பவர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொலை குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கின் எதிரிகள் தீனதயாளன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வழக்கின் அப்போதைய விசாரணை, அதிகாரியான மயியாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் அழகேசன் எதிரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். மேற்படி வழக்கின் விசாரணையானது மயிலாடுதுறை, அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இவ்வழக்கின் முதல் எதிரியான தீனதயாளன் என்பவர் கடந்த 2022 ம் ஆண்டு வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார். இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பானது 08.04.2025 ஆம் தேதி வழங்கப்பட்டது. இவ்வழக்கினை விசாரித்த அமர்வு நீதிமன்றநீதிபதி விஜயகுமாரி இவ்வழக்கின் மற்றொரு எதிரி செந்தில்குமார் என்பவரை குற்றவாளி என தீர்மானித்து, மேற்படி குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை  விதித்து தீர்ப்பளித்தார். பின்பு வழக்கின் குற்றவாளி செந்தில்குமார் என்பவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசுதரப்பில் வழக்கறிஞர் ராம.சேயோன் ஆஜராகி வாதாடினார். வழக்கினை தண்டனையில் முடிக்க சிறப்பாக பணியாற்றிய அரசுவழக்கறிஞர் ராம.சேயோன், மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் நீதிமன்ற அலுவலாற்றிய காவலர் மாரிமுத்து ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின். இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.