சேர நாட்டுக்கும் தமிழ்த் திரையுலகிற்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு. கேரளாவில் இருந்து ஏராளமான நடிகைகள் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி கோலோச்சி இருக்கிறார்கள். அந்தக் ‘கேரள நாட்டிளம் பெண்கள்’ வரிசை, அந்தக்கால பத்மினி தொடங்கி இந்தக் கால நயன்தாரா வரையிலான தொடர்ச்சி கொண்டது. அப்படி நடிக்க வரும் நடிகைகளில் ஒரு தனித்துவம் கொண்ட நடிகையாக ஈடன் குரிய கோஸ் உள்ளார். பணம், புகழ் என்பவற்றை மட்டுமே குறியாகக் கொண்டு வெற்று ஆர்வத்தில் நடிக்க வராமல் தனக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு வந்துள்ளவர் இவர். இவர் ஊடக மேலாண்மையில் எம்.பி.ஏ படித்தவர். இவருக்குத் தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கில மொழிகள் தெரியும். இப்போது தமிழில் இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த வகையில் இப்போது வந்துள்ள வாய்ப்புகளின் மூலம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார் என்றே கூற வேண்டும்.********
தொடக்கத்தில் நாடக மேடையில் தோன்றி அங்கிருந்து நடிப்புப்பயிற்சியை மேற்கொண்டு திரைக்கு வந்திருக்கும் இவர், முறைப்படி பரதநாட்டியம் கற்றவர். அழகிப் போட்டிகளில் பங்கு பெற்று மிஸ் கேரளா, மிஸ் கோயம்புத்தூர், என்று பட்டங்கள் பெற்றவர். தென்னிந்திய அழகிப் போட்டியில் மிஸ் சவுத் இந்தியா பட்டத்திற்கு இறுதிச்சுற்று வரை சென்றவர். மாடலிங்காக பல்வேறு விளம்பரங்களில் நடித்துக் கேமரா முன் எப்படித் தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்கிற அனுபவம் கொண்டவர் .இப்படிக் கலவையான அனுபவங்களின் மூலம் தனது தகுதியை வளர்த்துக் கொண்டுதான் திரையுலகில் அறிமுகமாகி இருக்கிறார். தமிழில் ‘ஆண்டவ பெருமாள்’, ‘இருக்கு ஆனா இல்ல’, ‘பனி விழும் நிலவு’, ‘ஏன்டா தலையில் எண்ண வைக்கல’, என்று வெவ்வேறு வகைத் திரைப்படங்களில் விதவிதமான பாத்திரங்கள் ஏற்று நடித்தவர். மலையாளத்தில் ‘காட்டுமாக்கன்’ படத்தில் நடித்தவர், துளசிதாஸ் இயக்கிய ‘கேர்ள்ஸ்’ படத்தில் பிரதான வேடமேற்றவர். இதில் பெண் கலைஞர்கள் மட்டுமே நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடகத் திரைப்பட அனுபவங்களைப் போலவே இணையத் தொடர்களிலும் பங்கெடுத்தவர். மாயத்திரை’, ‘குருதிக்காலம் ‘போன்ற தொடர்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் மொழிகளைத் தொடர்ந்து தெலுங்கில் ‘ஸ்ரீரஸ்து சுபமஸ்து’ படத்தில் நடித்துள்ளார் .ஆக தென்னிந்திய நடிகையாகி விட்டார்.

