“ஹாய்” திரைப்பட விமர்சனம்

எஸ்.எஸ்.லலித்குமார், விக்னேஷ்சிவன், நயன்தாரா ஆகியோரின் தயாரிப்பில், விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா, கவின், ராதிகா சரத்குமார், கே.பாக்கியராஜ், பிரபு, அம்ருதா, வி.டி.வி.கணேஷ், பெப்சி விஜயன், சத்யன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஹாய்”. பாக்கியராஜ் ராதிகா சரத்குமாரின் மகன் கவின். ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளோடு தனது உறவுக்காரப் பெண்ணை காதலிக்க முற்படுகிறார். ஆனால் அந்த பெண் கவினைக் காதலிக்க மறுக்கிறாள். இதற்கிடையில் பாக்கியராஜ், கவினின் திருமணத்துக்கு பெண் பார்க்கிறார். அதனால் யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு ஓடிவந்துவிடுகிறார். அங்கு ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். நயன்தாராவின் தந்தை பிரபு மதுவுக்கு அடிமையானவர். அவருக்கு கடன் கொடுத்தவர் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள ஆசைபடுகிறார். அதற்கு பிரபுவும் சம்பதிக்கிறார். இத்திருமணத்துக்கு விருப்பம் இல்லாத நயன்தாராவும் சென்னைக்கு ஓடிவந்து கவின் வேலைபார்க்கும் அதே அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறார். நயன்தாராவை கண்டதும் கவின் அவரை ஒருதலை பட்சமாக காதலிக்கிறார். ஆனால் நயன்தாரா கவினுடன் நட்பாக பழகுகிறார். சில மாதங்கள் கழித்து இருவரும் தங்களது ஊருக்கு திரும்பி வருகிறார்கள். நயன்தாராவுக்கு ஏற்கனவே பேசி வைத்த மாப்பிள்ளையோடு திருமண நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்கும்போது. அங்கு வந்த கவின், “எனது குழந்தை நயன்தாராவின் வயிற்றில் மூன்றுமாத குழந்தையாக வளர்கிறது இப்போது இவர் கர்பிணி” என்று பொய் சொல்லி அந்த நிச்சயதார்த்த்திலிருந்து நயன்தாராவை காப்பாற்றி தனது வீட்டுக்கு கூட்டிச் செல்கிறார். அவரின் வீட்டில் பாக்கியராஜ் கவினுக்கு தனது உறவுக்காரப் பெணணை பேசி முடிக்கிறார். கவினை நயன்தாரா காதலிக்கவில்லை. இந்நிலையில் கவினுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடந்தா? இல்லை அவரின் உறவுக்கார பெண்ணோடு திருமணம் நடந்ததா? என்பதை நகைச்சுவையுடன் சொல்கின்ற படம்தான் “ஹாய்”.

நயன்தாராவுக்கு இளமைக் குறைபாடு தெரிந்தாலும் கண்களின் கத்தி வீச்சும்,  முத்தம் கொடுக்க யத்தனிப்பது போல அந்த குவிந்த உதடுகளும் இன்னும் வீரியம் குறையவில்லை. வழக்கம் போல நன்றாக நடிக்கிறார்.  உற்சாகமாக நடிக்கிறார் கவின். மெல்லிய நகைச்சுவையை  இழையோடச் செய்ய முயலும் அவரது நடிப்பு சில இடங்களில் பலன் தருகிறது சில இடங்களில் பலன் தரவில்லை.  வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.   ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாக இருக்கின்றன ஜென் மார்ட்டின் இசை செண்டிமெண்ட் காட்சிகளில் கனம் சேர்க்கிறது.  இருக்கிற திரைக்கதையை சிறப்பாக தொகுக்கிறது பிலோமின்ராஜின் படத் தொகுப்பு.  திரைக்கதை தலையை சுத்தி மூக்கை தொடுவது போலவே இருக்கின்றன  மறைந்த பாக்கியராஜை, அவர் படங்களில் அந்தக் காலங்களில் இலைமறைவு காய் மறைவாக பேசியதை விட,  பச்சையாக பேச வைத்திருக்கிறார்கள். ராதிகா கதாபாத்திரத்துக்கு தேவையான காட்சிகள் இல்லை  பிரபு மட்டும் தப்பிக்கிறார். இளங்காதலர்களுக்கு இப்படம் பிரியாணி விருந்து. பெற்றோர்களுக்கு இப்படம் தக்காளிச் சோறு. ஒருமுறை குடும்பத்தோடு சென்று பார்த்து ரசித்துவிட்டு வரலாம்.