வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், ட்ரைகலர் பிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கும், ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த படம் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்புடன், படக்குழு மாதவன் இடம்பெறும் புதிய பதாகையும் வெளியிட்டுள்ளனர். கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலன் ஆகியோரும், ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர். மாதவன் மற்றும் சரிதா மாதவன் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஆர். மாதவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய் மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.*******
இப்படம் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், தயாரிப்பாளர்கள் புகழ்பெற்ற விநியோக நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை ஏஜிஎஸ் சினிமாவும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஸ்பிரிட் மீடியாவும், வெளிநாடுகளில் ஏபி இண்டர்நேஷனலும், கேரளாவில் ஊர்வசி தியேட்டர்ஸூம் விநியோகிக்கவுள்ளன. படத்தயாரிப்புடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்களின் தகவலின்படி, படப்பிடிப்பு நடைபெற்ற காலம் முழுவதும் மிகவும் நேர்மறையான மற்றும் உற்சாகமான சூழல் நிலவியது. இதற்குப் படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் ஒத்துழைப்பே முக்கியக் காரணம். மாதவனின் நடிப்பையும் அர்ப்பணிப்பையும் படக்குழுவினர் வியந்து பாராட்டியுள்ளனர். சமீப ஆண்டுகளில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே மாறுபட்ட பரிணாமத்தில் அவரை இந்த படத்தில் பார்க்கலாம் என்கின்றனர். படப்பிடிப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பார்வையாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மற்றும் உணர்வுபூர்வமாக ஈர்க்கக்கூடிய திரையனுபவத்தை வரும் ஜூலை மாதம் இந்தப் படம் தர இருக்கிறது. படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும்.

