மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இராணா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பெத்தி”. ஆந்திரா மாநிலத்திலுள்ள ஒரு மலைக் கிராமத்தில் மலைவாழ்யின மக்கள் கொத்தடிமைகளாக கரும்பு பண்ணையில் வேலை பார்க்கிறார்கள். அவ்வூர் அரசாங்க பதிவேட்டில் இல்லை. அதனால் அந்தகிராமத்தில் வாழ்கின்ற மக்களுக்கு ஓட்டுரிமை, குடும்ப அட்டை, பாடசாலை, சாலை வசதிகள், போக்குவரத்து பேரூந்து, ரயில் நிலையம், காவல் நிலையம், மருத்துவமனை என்ற எதுவுமே இல்லை. அங்கு வாழும் மலையின ஜாதி மக்களுக்கு முகவரியும் இல்லை. அந்த மலைக் கிராமத்தை தாண்டி ஒரு ரயில் செல்கிறது. அந்த ரயிலை தங்களது கிராமத்தில் நிறுத்தி செல்ல வேண்டுமென்று போராடி வருகிறார்கள். அந்த கிராமம் அரசாங்க பதிவேட்டில் இல்லாததால் ரயிலை அங்கு நிற்காமல் செல்கிறது. அங்கு ரயில் நின்று போக வேண்டும் என்றும் தங்களது கிராமமும் அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்றும் எங்களுக்கென்று ஒரு அடையாளமும் முகவரியும் வேண்டுமென்று மலையினஜாதியில் பிறந்த ராம்சரண் போராடுகிறார். ராம்சரண் அந்த கிராமத்தில் மட்டைப்பந்தாட்ட வீரர். அவர் அடிக்கும் பந்து பல மைல்களை கடந்து செல்லும். அதனால் அம்மலையினஜாதி இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் அவரை கடவுளாக பார்க்கிறார்கள். அவர் நினைத்தபடி அம்மலைவாழ் மக்களுக்கு முகவரி கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் கதை. இந்த கதை ஒரு கொரியன் படத்தை தழுவி எடுக்கப்பட்டதென தெரிகிறது. ஒரு அழுத்தமான கதையில், சமூக கருத்துள்ள விஷயத்தில் கதாநாயகனின் தோரணையோடு நடித்து இருக்கிறார் ராம்சரண். மட்டை பந்தாட்டத்தில் அவர் ஆடும் ஆட்டம் அலாத்தியானது. அதன் பிறகு குஸ்தி சண்டை வீரனாக பரிணாம வளர்ச்சி பெற்று திரையரங்கை அதிர வைக்கிறார். இப்பட்ச்த்தில் ராம்சரணின் கடுமையான உழைப்பு வெளிப்படுகிறது. ஒவ்வொரு சண்டைக் காட்சிகளும் பார்வையாளர்களை மிரள வைக்கிறது. படம் முழுக்க அசைவ விருந்து படைத்த இயக்குநர் புச்சி பாபு சனா, இலையின் ஓரத்தில் வைக்கப்படும் ஊருகாயாக ஜான்வி கபூரை வைத்துவிட்டார். படத்தை ஏர்.ஆர்.ரஹ்மானின் இசை தூக்கி நிறுத்துகிறது. ராம்சரணுடன் ஸ்ருதிஹாசனும் அவருக்கு போட்டியாக ஜான்வி கபுரும் ஆடும் ஆட்டம் திரையரங்கை திக்குமுக்காட வைத்துவிட்டது. ரஹ்மானனின் பின்னணி இசை கதையோடு பின்னி பிணைந்திருக்கிறது. குஸ்தி வாத்தியாராக வரும் சிவராஜ்குமார் ராம்சரணுக்கு குஸ்தி சொல்லிக்கொடுக்கும் விதம் பார்வையாளர்களை கைத்தட்ட வைக்கிறது. உரிமைக்காக போராடும் வலிமை மட்டுமிருந்தால் போதும், வெற்றியின் எல்லையை தொட்டுவிடலாம் என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் புச்சி பாபு சனா.
“பெத்தி” திரைப்பட விமர்சனம்
